பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை வழங்கும் பிரேமலதா விஜயகாந்த்
சான்றிதழ்களை வழங்கும் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மகளிர் தினக் கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சரண்யா விஜய் என்ற எம்ராய்டிங் தையல் பயிற்சி நிபுணர் வழங்கும் 6 மாத இலவச பயிற்சியை பெறுவதற்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு பயிற்சி இலவச சான்றிதழை வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 300 பெண்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சிஎம்பிடி காவல் நிலையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் காவல் துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.‌ ஆனால், அனுமதியின்றி இந்நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து சிஎம்பிடி போலீஸார் அங்கு சென்று விழா ஏற்பாட்டாளரிடம் அனுமதியின்றி எவ்வாறு நிகழ்ச்சி நடத்தலாம் எனக் கேட்டுள்ளனர்.

நிகழ்வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்
நிகழ்வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

அதற்கு தேமுதிகவினர், நிகழ்ச்சி எங்கள் அலுவலகத்தில் நடைபெறுகிறது, இதில் யாருக்கும் எந்த பிரச்சினையும், பாதிப்பும் இல்லை எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் இந்நிகழ்ச்சியில் ஷாமியானா பந்தல் மற்றும் பேனர் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனால் இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் அதிகாரி சத்யநாராயணன், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in