இந்தியாவின் ஹமிதா பானுவை கொண்டாடும் கூகுள்... டூடுல் வெளியிட்டு சிறப்பு!

கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்
கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனையான ஹமீதா பானுவை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம்  டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது . 

ஹமீதாபானு
ஹமீதாபானு

1940 - 50 காலகட்டத்தில் ஆண்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த ஒரு விளையாட்டுத் துறையில் ஹமீதா பானு காலடி எடுத்து வைத்ததை நினைவுகூரும் வகையில் இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்டுமஸ்தான ஹமீதா பானுவின்  உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு அவர் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர். 

ஹமீதாவைப் பற்றிய கூகுள் டூடுல் விவரிப்பில், “ஹமீதா பானு அவர் காலத்தில் தனக்கென தனி வழி வகுத்து மிளிர்ந்தவர். அவருடைய துணிச்சல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. விளையாட்டைத் தாண்டியும் அவர் தனக்குத் தானே உண்மையாக நடந்துகொண்ட விதத்துக்காகவே அவர் எப்போதும் கொண்டாடப்படுவார்” என சிலாகித்துக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

ஹமீதா பானு
ஹமீதா பானு

1954 ம் ஆண்டு காலகட்டத்தில் மிகப்பெரும் மல்யுத்த  வீராங்கனையாக திகழ்ந்த ஹமீதா பானு,   ரஷ்யாவின் பெண் கரடி என்றழைக்கப்பட்ட வெரா சிஸ்டிலினை வீழ்த்தி உலகப் புகழ் பெற்றார். வெரா சிஸ்டிலினை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஹமீதா வெற்றி கண்டதன் மூலம் இணையற்ற வீராங்கனையாக திகழ்ந்தார்.

தன்னை மல்யுத்தத்தில்  தோற்கடிக்கும் ஆணை  திருமணம் செய்து கொள்வதாக சவால் விடுத்தவர் இந்த ஹமீதா பானு. சவாலை ஏற்ற  பஞ்சாப் மாநிலத்தின்  பிரபல மல்யுத்த வீரர், கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு பிரபல வீரர், குஜராத்தை சேர்ந்த வீரர் என மூன்று பேரை  அடுத்தடுத்து தோற்கடித்தார். இதே போல பல  ஆண் போட்டியாளர்களை அவர் வெற்றி கண்டுள்ளார். அதற்காக ஹமீதா பானு மீது பார்வையாளர்கள்  கல் வீசி தாக்கிய நிகழ்வுகளும் உண்டு.

ஆஜானுபாகுவான  உடல் கட்டமைப்பு கொண்ட ஹமீதா பானு, 108 கிலோ எடை கொண்டவர். ஒரு நாளில் 5.6 லிட்டர் பால், 1.8 லிட்டர் பழச்சாறு, 6 முட்டைகள், 2.8 லிட்டர் சூப், 1 கிலோ ஆட்டிறைச்சி, பாதாம், அரைக் கிலோ வெண்ணெய், பிரெட், இரண்டு ப்ளேட் பிரியாணி உண்பார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி மக்களை அவர் மீது ஆர்வம் கொள்ள வைத்தது.  அப்படிப்பட்டவருக்கு இன்று டூடுள் வெளியிட்டு கூகுள் சிறப்பு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in