ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குவதை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் ஏப்ரல் மாத கடைசி மற்றும் மே மாத ஆரம்பத்தில் பூமியும் சூரியனின் மிக அருகாமையில் பயணிக்கும். அப்போது தான்  வெப்பம் அதிகளவில் உணரப்படுகிறது. இந்த காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் என்று சொல்வார்கள். 

இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் இன்று  தொடங்கியுள்ளது. இன்று  தொடங்கும் அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் நீடித்து மே 28 ம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகமான அளவு வெப்பநிலை உள்ள நிலையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியவர்கள் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே குளுகுளு சீசன்  இருக்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களிலும்கூட இந்த ஆண்டு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. இன்று முதல் அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று  வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி,  ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் நேற்று வேலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இனி வரும் நாட்களில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மே 7 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது மக்கள் மனதை குளிர்வித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in