பெண் காவலர்கள் குறித்தும், காவல் துறை அதிகாரிகள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக அரசு குறித்தும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். சவுக்கு என்ற ஆன்லைன் தளத்தை நடத்தக்கூடிய அவர், பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அத்துடன் அதிமுகவிற்கு ஆதரவாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
கடந்த ஜனவரி 26-ம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அழைப்பு வந்த நிலையில், அதில் சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற சவுக்கு சங்கருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் கூடுதலாக சிலருடன் அங்கு கார்களில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகு சவுக்கு சங்கர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப்திவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 506 (1) என்ற கொலை மிரட்டல் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காகும்.
இந்த நிலையில் தேனியில் சவுக்கு சங்கரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார், அவரை கோவை அழைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம் கூறியுள்ளார்.