
பிக் பாஸ் அக்ஷரா வீட்டில் நேர்ந்துள்ள இழப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சமயத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் அக்ஷரா. இவர் பிரபல மாடலும் கூட. ஆரம்பத்தில் இவர் திமிரானவர் போல இருக்கிறாரே என ரசிகர்கள் சொன்னாலும் பிறகு இவரது பிக் பாஸ் விளையாட்டு குறித்து பாராட்டவும் செய்தார்கள்.
பிக் பாஸ் இல்லத்தில் ‘கடந்து வந்த பாதை’ டாஸ்க்கில் தன் குடும்பம் பற்றி அக்ஷரா கூறும்போது தன் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தனக்கு தன் அம்மாவும் அண்ணனும்தான் இப்போது பக்கபலம் என்றும் கூறினார். தனக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என கண்ணீருடன் உருக்கமாக அவர் கூறியது பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்பு அக்ஷரா தனது அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தி வந்தார். சமீபத்தில் அவரது அம்மாவின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக அவர் கொண்டாடியுள்ள நிலையில், நேற்று முன் தினம் அக்ஷராவின் அம்மா கெளரி சுதாகர் ரெட்டி உடல்நலக் குறைவால் இறந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் தந்தை இறப்பில் இருந்தே வெளியே வருவது தனக்கு கஷ்டமாக இருந்ததாக அக்ஷரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது அம்மாவின் இறப்பில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் விரைவில் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.