பரபரப்பு… திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல்!

பரபரப்பு… திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல்!

திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளரான முத்து (42) என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் ராஜேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர்களை ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களில்  மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. முத்து போளூர் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் அருகே வந்த போது பின்னால் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளனர்.

முத்து, ராஜேஷ் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து அந்த கும்பல் அவர்களை வெட்ட முயன்றது. இதில் ராஜேஷ் தப்பித்து ஆவின் குளிரூட்டும் மையத்திற்குள் சென்றார். முத்துவை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர்.

அவருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததை அடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தில் 6 பேர் வந்தது தெரிய வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in