சென்னையில் கட்டிடம் கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

கட்டிட அனுமதி கட்டணம் 100% உயர்வு
கட்டிட அனுமதி கட்டணம் 100% உயர்வு

சென்னையில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக புதிய கட்டிட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக தொழிற்சாலைகளில் 176 அடிக்கு மேல் கட்டிட பரப்பு இருந்தால். கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளது.

தளப்பரப்பு குறியீட்டின் (FSI) அடிப்படையில், 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டினால் ஏற்கெனவே, முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90 கட்டணமும், 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த்தப்படவில்லை.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

அதேநேரம், வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் தளப்பரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1,076 அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில், குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1050 என இருந்தது. இந்த தொகையானது, தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன்

அதேபோல், வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின்படி, இந்த புதிய கட்டண உயர்வு வரும் 10ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in