ஹர்திக் பாண்டியா உள்ளே வருகிறார்; வெளியேறப்போகும் வீரர் இவர்தான்... பரபரப்பு தகவல்கள்!

ஹர்திக் பாண்ட்யா
ஹர்திக் பாண்ட்யா

உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். மீண்டும் ஹர்திக் உள்ளே வந்தால் வெளியே அமரப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கு பல அணிகள் முட்டிமோதி வருகின்றனர். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இந்த அரையிறுதி ரேஸில் தற்போது முன்னிலையில் இருந்தாலும் அவர்களின் அடுத்தடுத்த போட்டி மிக முக்கியமானதாகும்.

ஆனால், இந்திய அணிக்கு அரையிறுதி குறித்த கவலை என ஏதும் இல்லை. நல்ல ரன்ரேட்டுடன் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மட்டுமின்றி அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களும் இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இந்திய அணி
இந்திய அணி

இருப்பினும், ஹர்திக் பாண்டியாவின் காயம் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அணிக்கு பெரும் பங்கை ஆற்றி வந்தவர். அவருடைய இடத்தை இப்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் பகிர்ந்துகொண்டு மாஸ் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. ஆனாலும் அவர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றும், தென்னாப்பிரிக்கா அல்லது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில்தான் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என கூறப்படுகிறது.

இந்திய அணிக்கு நாக்அவுட் சுற்றில் கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வரும் நிலையில், இந்தியா இந்த ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி உலகக்கோப்பையை முத்தமிட ஹர்திக் பாண்டியா மிக மிக முக்கியமானவர். எனவே, ஹர்திக் பாண்டியா அணிக்கு வருவது இன்றியமையாதது. அப்போது, ஹர்திக் உள்ளே வந்தால் வெளியே அமரப்போவது யார் என்ற கேள்விதான் முதலில் எழும்.

ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்

மாற்று வீரராக களம்கண்ட சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து அணியில் இருந்தால் அது இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலம் என பலரும் கருதுகின்றனர். அப்படியிருக்கையில், நம்பர் 4இல் சற்று திணறிவரும் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியே அமரவைக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் அப்படி மாற்றும்போது பேட்டிங் ஆர்டரிலும் சிறிது மாற்றம் தேவை எனலாம். 5ஆவது வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல் நம்பர் 4ல் இறங்க வேண்டும் எனவும், சூர்யகுமார் 5ஆவது வீரராக களமிறங்க வேண்டும் எனவும் சிலர் கருதுகின்றனர். பாண்டியா, ஜடேஜா முறையே 6வது, 7வது இடத்தில் விளையாடுவார்கள்.

ஆனால், ஒரு சிலரோ சூர்யகுமார் யாதவ் ஃபினிஷர் என்பதால் அவரை 6ஆவது இடத்தில் போட்டு, ஹர்திக் பாண்டியாவை 4வது இடத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும், அப்படிச் செய்தால் கேஎல் ராகுல் அவரின் இயல்பான ஓடிஐ ஆட்டத்தை விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா சுழலையும் அடிக்கக் கூடியவர் என்பதால் நம்பர் 4 அவருக்கு பலனளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், தொடர் பாதி தூரத்தை கடந்துவிட்ட நிலையில், செட்டிலான பேட்டிங் ஆர்டரை மாற்றுவது சற்று கடினம்தான். ஆனால், இந்திய அணி நிர்வாகம் அதன் மீது சற்று கவனமாகவே முடிவெடுக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in