உலகக் கோப்பையிலிருந்து விலகியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஹர்திக் பாண்டியா உருக்கம்!

உலகக் கோப்பையிலிருந்து விலகியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஹர்திக் பாண்டியா உருக்கம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா ஏழு போட்டிகளில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா காயம்
ஹர்திக் பாண்டியா காயம்

கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மேட்ச்சின்போது, பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா, பேட்ஸ்மேன் அடித்த ஸ்டிரைட் ட்ரைவ் பந்தை காலால் தடுக்க முயன்றார். அப்போது அவரது கணுக்காலில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிகவும் முக்கியமான ஆட்டக்காரர்களில் ஒருவர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இவரை பயன்படுத்த முடியும் என்பதால் அணியில் இவரது இருப்பு பலமளித்தது. ஓரிரு நாட்களில் குணம் அடைந்து அவர் அணிக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பாண்டியாவின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று ஹர்திக் பாண்ட்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடல் அளவில் விலகியிருந்தாலும் மனதளவில் நான் அணியுடன் எப்போதும் இணைந்திருப்பேன். ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்துகளின்போது இந்திய அணியை ஊக்கப்படுத்துவேன். இதுவரையில் எனக்கு ஆதரவு தெரிவித்து வந்த அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த அணி எனக்கு சிறப்பு மிக்க ஒன்று. நிச்சயமாக நாங்கள் எல்லோரையும் பெருமைப்படும் படி செய்வோம்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in