சாம்பியனை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்... மகிழ்ச்சியால் தேம்பி அழுத சிறுவன்... கட்டியணைத்த ஆட்டநாயகன்!

ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 41வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் 80 ரன்கள் மற்றும் இக்ராம் அலிகிலின் 58 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அடில் ரசீத் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான்
முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான்

285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் 66 ரன் எடுத்தார். ஆப்கான் அணியில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரின் சுழற்பந்து வீச்சாளர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். 3 விக்கெட், 22 ரன் என பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த முஜீப் உர் ரஹ்மான் ஆட்டநாயகான தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி, அந்த ஆண்டு ஸ்காட்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு 14 போட்டிகளில் விளையாடி தோல்வியை கண்ட அந்த அணி, நடப்பு உலக சாம்பியனை பந்தாடியுள்ளது. அந்த அணியின் வரலாற்று வெற்றியை வீரர்கள் மட்டுமின்றி ஆப்கான் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் ரசிகர்
ஆப்கானிஸ்தான் ரசிகர்

அதேசமயம் போட்டி முடிந்ததும், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு இளம் ரசிகர், முஜீப்பை சந்தித்தார். அந்த சிறுவன் ஆப்கான் வெற்றி பெற்றதால் ஆனந்த கண்ணீருடன் நட்சத்திர ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரைக் கட்டிப்பிடித்தார். குழந்தை அழுவதைப் பார்த்து, ஆப்கானிஸ்தான் உறுப்பினர் ஒருவர் விரைவாக ஒரு சாக்லேட்டைக் கொண்டு வந்து முஜீப் உர் ரஹ்மானிடம் கொடுத்தார், பின்னர் அவர் அதை இளம் ரசிகரிடம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in