நெல்லையில் பரபரப்பு... காங்கிரஸ் தலைவரை காணவில்லை... காவல் நிலையத்தில் புகார்!

ஜெயக்குமார் தனசிங்
ஜெயக்குமார் தனசிங்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்-கை காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அந்த கடிதம்
அந்த கடிதம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில் அவரைக் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்ட அவர் ஜெபம் செய்வதற்காக எங்கேயாவது தனிமையில் சென்றிருப்பார் என்று கருதியதாகவும் ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் புகாரை பதிவு செய்துள்ள நெல்லை மாநகர போலீஸார் அவர் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசியாக அவர் சென்றது எங்கே? அவரது தொலைபேசி உரையாடல்கள் ஆகிவை குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்டவர்களிடம் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் கடந்த 30 ம் தேதியன்று மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளது. அதில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சொத்துப் பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தன்னுடன் சிலர் மோதல் போக்கில் இருந்து வருவதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்,  முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் ஓருவர் உள்ளிட்ட சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு பல்வேறு விஷயங்களை அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது முழுக்க முழுக்க உட்கட்சி மோதல் விவகாரமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காணாமல் போன காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனது கட்சிக்காரர்கள் மீது குற்றம் சாட்டி ஏற்கனவே காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை கூர்ந்து நோக்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in