தமிழகம் முழுவதும் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகளும் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங் களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளின் விவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட 561 வழக்குகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளதாகவும், அதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!
பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!
தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!