விஜய் வழியில் தமிழக மீனவர்கள்... புதுக்கட்சி தொடங்க புறப்பாடு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Updated on
2 min read

தங்களின் நலன் காக்க தனிக் கட்சி தொடங்கப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பில் இருக்கும் அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தி காரணமாக தேர்தலுக்குத் தேர்தல் தனிக் கட்சிகள் முளைப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமான புதிய கட்சிகள் அரசியல் களத்தில் களமிறங்கியுள்ளன.

அண்மையில், பாஜக ஆதரவாளரும் நடிகருமான எஸ்.வி.சேகர், பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி ஒன்று தொடங்கப்படும் என்று அறிவித்தார். பெயர், கொடி முடிவானதும் இந்தக் கட்சி துவங்கப்படும் எனவும் பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே தனி கட்சி தொடங்கப்படு வதாகவும் அவர் தெரிவித்தார்.

காசிமேடு துறைமுகம்
காசிமேடு துறைமுகம்

இந்த நிலையில், தமிழக மீனவர்களும் தங்களுக்காக புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறது அரசியல் பரப்பாகி இருக்கிறது. சென்னை காசிமேடு பகுதியில் நேற்று மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு மீனவ சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடலில் மீனவர்களின் படகுகள்
கடலில் மீனவர்களின் படகுகள்

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் ரவி, ”மீனவர்கள் நலன்களை காக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி துவங்க இருக்கிறோம். நாங்கள் கட்சி துவங்குவதற்கு காரணமாக இருந்த அதிமுக, திமுக கட்சிகளுக்கு நன்றி. திருவள்ளூர் ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி வரை 610 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து ஒற்றை தலைமையின் கீழ் எங்களின் புதிய கட்சி உருவாக்கப்படும்.

தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு 12 சதவீத ஓட்டு வங்கி இருக்கிறது. அதிமுகவில் உள்ளது போன்ற சட்ட விதிகளை பின்பற்றி இந்தக் கட்சி அமைக்கப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் வாயிலாகவே கட்சியின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “புதிய கட்சியை தொடங்குவதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம். அதற்குள் தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்பட்டு, விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி கட்சிப் பெயர், சின்னத்தை அறிவிப்போம்.

எப்படியும் சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். 100 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்போம். கட்சி துவக்க பணிக்காக அனைத்து மாவட்டங்களிலும் திண்ணைப் பிரச்சாரம் செய்யும் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம் ” என்றார்.

காசிமேடு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்
காசிமேடு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ளார். அதேபோல தற்போது மீனவர்களை ஒன்றிணைத்து துவங்கப்படும் இந்த கட்சியும் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்த கட்சிகள் எதுவும் தங்களுக்கான இலக்கை தொடமுடியவில்லை.

மதிமுக, தேமுதிக, தமாகா, பாமக, விசிக போன்ற கட்சிகள், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய போதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவிற்கு கணிசமான வெற்றியை இவர்களால் குவிக்கமுடியவில்லை. பிற்பாடு உதயமான நாம் தமிழர், அமமுக, மநீம போன்ற கட்சிகளாலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

தற்சமயம், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் தான் கணிசமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், தங்களுக்காக தனிக் கட்சி தொடங்கப் போவதாக மீனவர் சங்க பிரநிதிகள் அறிவித்திருப்பது இந்தக் கட்சிகளை சற்றே கலக்கமடையச் செய்திருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in