ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் உள்பட இருவர் சுட்டுக்கொலை!

நஃபே சிங் ரதீ
நஃபே சிங் ரதீ

ஹரியாணாவில் இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதீ  மற்றும் அவருடன் காரில் பயணம் செய்த கட்சி நிர்வாகி ஆகியோர் மர்மக் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நஃபே சிங் ரதீ
நஃபே சிங் ரதீ

ஹரியாணா மாநிலத்தில் இயங்கி வரும் இந்திய தேசிய லோக் தள கட்சியின் கட்சியின் தலைவர்  நஃபே சிங் ரதீ . இவர் முன்னாள் எம்எல்ஏவாக பணியாற்றியவர். கட்சிப் பணிக்காக தனது காரில் கட்சி நிர்வாகி ஜெய் கிஷன் என்பவருடன் நேற்று இரவு பயணித்தார். பஹதுர்கர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு காத்திருந்த மர்மக் கும்பல், அவரது காரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. 

இதில் காரின்  கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு குண்டுகள் பாய்ந்ததில் நஃபே சிங்கும், அவருடன் காரில் பயணம் செய்த கட்சி நிர்வாகி ஜெய்கிஷனும் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஹரியாணாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட கார்
துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட கார்

இந்த சம்பவம் குறித்து ஜஜ்ஜார் மாவட்ட எஸ்.பி. அர்பித் ஜெயின் கூறுகையில், “இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிஐஏ மற்றும் எஸ்டிஎஃப் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். மேலும், இது பற்றி ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எஸ்டிஎஃப் விசாரணையில் இறங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இப்படுகொலை குறித்து ஹரியாணா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா கூறுகையில், “ஹரியானாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ஹரியாணாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் சாலைகளில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இங்கு அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமா அல்லது முதல்வர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவாரா?” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in