பிரதமர் மோடி மீது பொய்யை பரப்புகிறார் முதல்வர் ஸ்டாலின்... தமிழிசை குற்றச்சாட்டு!

ஸ்டாலின் மோடி
ஸ்டாலின் மோடி

"ஒடிசா பிரச்சாரத்தில் தமிழகத்தை சேர்ந்த தனிநபர் குறித்து மோடி பேசியதை, ஒட்டுமொத்த தமிழர்களை இழிவுப்படுத்திவிட்டார் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்" என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில், 'ஒட்டுமொத்த தமிழர்களையெல்லாம் பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை வேண்டுமென்றே முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். ஒடிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரியாக இருந்துகொண்டு பினாமியாக பின்புலத்திலிருந்து ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் தடுக்கிறார் என்ற உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்காக அந்த தனிநபரை குறிப்பிட்டுதான் மோடி பேசினார்.

அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்துவிட்டதாக என்று ஸ்டாலின் திரித்து கூறுகிறார். அவர்தான் தமிழர்களை அவமானப்படுத்துகிறார். வழக்கம்போல பொய் பிரச்சாரம் செய்கிறார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன், 5டி திட்ட தலைவர் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன், 5டி திட்ட தலைவர் வி.கே.பாண்டியன்

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சாம் பிட்ரோடா என்பவர் தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்களை எல்லாம் ஆப்பிரிக்க இனத்தைச் சார்ந்தவர்கள் போல் கருப்பாக உள்ளனர் என்று கூறும்போது அது தமிழகர்ளையும் உள்ளடக்கியது தான் என்ற போதிலும் திமுகவினர் எந்தவித எதிர்க்கவில்லை. ஆனால், சாம் பிட்ரோடா கூறியது நிலப்பரப்பை பற்றிதான், மக்களை அல்ல என்று புது விளக்கம் அளித்தனர்.

இன்று ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழரை குறிப்பிட்டதற்கே எல்லா தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழினத்தை அவமானப் படுத்திவிட்டார் பிரதமர் என்று சொல்லும் ஸ்டாலின், அன்று மத்திய, மாநில ஆட்சியில் இருந்தபோது இலங்கையில் தமிழ் சொந்தங்கள் படுகொலை நடந்த போது ஆட்சியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்தான் தமிழின விரோதிகள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

புதிய நாடாளுமன்றத்தில் நம் தமிழர்களின் பண்பாட்டு சின்னமான செங்கோலை நிறுவி நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு தமிழக ஆன்மீகப் பெரியவர்களை அழைத்து கெளரவித்து தமிழ்நாட்டின் பெருமையை நிலை நிறுத்தியவர் மோடி. அப்போது மோடியை பாராட்டாமல் கேலி பேசியவர் ஸ்டாலின். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை உயர் பதவியில் அமர்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் தமிழர்கள் என்று என்றாவது திமுக பாராட்டியது உண்டா?

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

ராஜேந்திரசோழனின் பெயரை மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு வைக்கும்போது தமிழர்களின் பெருமையை பாஜக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்கிறது என்ற பெருமையை என்றாவது நீங்கள் பாராட்டி இருக்கிறீர்களா? தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பற்றுக்கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு தனிநபரை பற்றி கூறியதை இப்படி திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள்.‌ மோடியின் தமிழ்ப்பற்று என்பது உண்மையான தமிழ்ப்பற்று. அதை அவர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், தமிழக மக்களுக்கும் பிரதமருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திரித்து பேசுவது கண்டிக்கத்தக்கது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in