காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

காதலித்ததால் ஆத்திரம்...
தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

பழங்குடியின இளைஞரைக் காதலித்த 18 வயது தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை அவரது சகோதரர்கள் கோடாரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் சேதா கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலனுடன், சிறுமி நேற்று தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற சிறுமியின் சகோதரர்கள், இருவரையும் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரையும் கோடாரியால் வெட்டியுள்ளனர். இதில், அவர்களிடமிருந்து பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தப்பிச் சென்று கிராமத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து கிராம மக்கள், காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்த போது, சிறுமி கோடாரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சதார் காவல் நிலைய அதிகாரி பிபின் குமார் கூறுகையில், " பழங்குடியின இளைஞருடன் சிறுமி இருந்த போது அவரது சகோதரர்களால் பிடிக்கப்பட்டு சேதா கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்று நேற்று கொலை செய்துள்ளனர். தப்பித்து வந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவான சிறுமியின் சகோதரர்களைத் தேடி வருகிறோம்" என்றார்.

காதலித்த காரணத்தால் தங்கையை அண்ணன்களே வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in