குஜராத் பிரச்சாரத்தில் குதிக்கும் சுனிதா கேஜ்ரிவால்... ஆம் ஆத்மியின் அடுத்த அதகளம் ஆரம்பம்

சுனிதா கேஜ்ரிவால்
சுனிதா கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகராக குஜராத்தில் களமிறங்குகிறார். அதற்கான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கு பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைபட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

அதிஷி உடன் அர்விந்த் கேஜ்ரிவால்
அதிஷி உடன் அர்விந்த் கேஜ்ரிவால்

அப்படி கேஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநில நிதியமைச்சரான அதிஷியின் பெயர் அதிகம் அடிபட்டது. ஆனால் கட்சியின் அடுத்தக்கட்டத் தலைவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் அரசியல் வசீகரம் இல்லாததில் அவர் பின்தங்கினார். அடுத்தபடியாக கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சிறையிலிருக்கும் கேஜ்ரிவால் குரலை பொதுவெளியில் எதிரொலிப்பதும், அனுதாபம் சேர்ப்பதுமாக சுனிதா கேஜ்ரிவாலின் பங்களிப்பு கட்சியில் அதிகரித்து வருகிறது. வலுவான தலைமை இல்லாவிடில் கட்சி கலகலத்துப்போகும் என்பதை ஆம் ஆத்மி தலைவர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். கேஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு ஆம் ஆத்மி ராஜ்ய சபா எம்பிக்கள் பலரும் அமைதியானார்கள்.

அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவின் நெருக்கடிகள் தாளாது கட்சித்தாவ மேலும் பலர் தயாராக உள்ளனர். இந்த வகையில் கட்சியில் கேஜ்ரிவாலின் இடத்தை நிரப்ப சுனிதா கேஜ்ரிவாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அதன் எதிரொலிப்பாக, குஜராத் மக்களவைத் தேர்தல் களத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நட்சத்திர பிரச்சாரகர்களில் ஒருவராக சுனிதா கேஜ்ரிவால் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி, பஞ்சாப்புக்கு அடுத்தபடியாக, குஜராத் வாக்காளர்களை ஆம் ஆத்மி அதிகம் நம்பியிருக்கிறது. ஆம் ஆத்மியை தேசியக் கட்சியாக வளர்த்தெடுத்ததில் குஜராத் வாக்காளர்களுக்கு முக்கிய பொறுப்புண்டு. அதே போன்று பாஜக தலைவர்களுக்கு எரிச்சலூட்டி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிரான வழக்கு, விசாரணை நடவடிக்கைகளை முடுக்கி விடவும் குஜராத் காரணமானது.

தற்போது குஜராத் பிரச்சாரத்தில் களமிறங்கும் சுனிதா கேஜ்ரிவால் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிக்க இருக்கிறார். கூடவே சிறையில் அடைக்கப்பட்ட கணவருக்காக நியாயம் கேட்கவும் இருக்கிறார்.26 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் பருச், பாவ்நகர் என இரண்டே தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. எனினும் கூட்டணியான காங்கிரஸ் போட்டியிடும் ஏனைய 24 தொகுதிகளிலும் சுனிதா கேஜ்ரிவாலை உள்ளடக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர்.

சுனிதா கேஜ்ரிவாலை ஒரு அரசியல் தலைவராக வளர்த்தெடுக்கவும் குஜராத் அரசியல் களம் தயாராக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in