சர்ச்சையான இனவெறி கருத்து... காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து விலகினார் சாம் பிட்ரோடா

சாம் பிட்ரோடா
சாம் பிட்ரோடா

சாம் பிட்ரோடா தெரிவித்திருந்த கருத்து இனவெறி என்ற பெயரில் சர்ச்சைக்கு ஆளானதில், காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த பொறுப்பிலிருந்து அவர் இன்று விலகினார்.

இந்தியர்களின் பன்முகத் தன்மையை விவரிக்கும் முயற்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவராக இருந்த சாம் பிட்ரோடாவின் பேச்சு இன்று சர்ச்சையானதை அடுத்து, அவர் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக - காங்கிரஸ் மோதல்
பாஜக - காங்கிரஸ் மோதல்

அண்மையில் சொத்துரிமை என்பதை மையமிட்டு சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து, மக்களவைத் தேர்தல் மேடைகளில் பாஜகவால் பெரும் விவாதமாக எழுப்பப்பட்டது. நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உள்ளது என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்தையும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் முடிச்சிட்டு பாஜக அண்மையில் காங்கிரஸாரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்காவில் அமலில் உள்ள பரம்பரை சொத்து வரி சட்டம் குறித்து நினைவூட்டிய சாம் பிட்ரோடா, ’அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை. இது குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதனை முன்வைத்து, ‘நீங்கள் இறந்த பிறகு காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து சொத்துக்களை பறித்து வேறு ஒருவருக்கு வழங்கப் பார்க்கிறது’ என்று பாஜக தாக்குதல் தொடுத்தது. சுதாரித்த காங்கிரஸ் கட்சி, அது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என பின்வாங்கியது.

தற்போது இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் முயற்சியிலான சாம் பிட்ரோடாவின் பேச்சு, இனவெறி அடிப்படையிலானது என பாஜகவால் சர்ச்சைக்கு ஆளானது. ஊடகப்பேட்டி ஒன்றில் பேசிய சாம் பிட்ரோடா ”இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை நாம் சிறப்பாக வைத்திருக்க முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களாகவும், தெற்கே உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று தெரிவித்து இருந்தார்.

சாம் பிட்ரோடாவின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடியில் தொடங்கி பாஜக தலைவர்கள் பலரும் தீவிரமாக எதிர்வினையாற்றினார்கள். காங்கிரஸ் கட்சியும் சங்கடத்துக்குள்ளானது. ’இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்கு அவர் முன்வைத்த ஒப்புமைகள் ’மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி தன்னை விலக்கிக்கொண்டுள்ளது.

சர்ச்சைகள் அதிகரித்ததை அடுத்து சாம் பிட்ரோடா தரப்பில் ராஜினாமா அறிவிப்பு வெளியானது. தனது சொந்த விருப்பத்தின் பேரில் சாம் பிட்ரோடா பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவரது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் பின்னர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். ஆனபோதும் காங்கிரஸாரின் மீதான இனவெறி மற்றும் நிறவெறி கருத்து என்ற பெயரில் பாஜகவின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in