ராணுவ வீரர்களை கூலித்தொழிலாளர் போலாக்கினார் மோடி... அக்னிவீரர் விவகாரத்தில் ராகுல் காந்தி வேதனை!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடி, இந்தியாவின் ராணுவ வீரர்களை தொழிலாளர்களைப் போலாக்கி விட்டதாகவும், பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட அக்னிவீரர் திட்டத்தை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முழுவதுமாக கைவிடுவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் மகேந்திரகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அக்னிவீரர் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முழுவதுமாக கைவிடப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

ஹரியாணாவின் 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மே 25 அன்று நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, அக்னி வீரர் திட்டம், விவசாயிகள் போராட்டம் என ஹரியாணா மாநிலத்துக்கு நெருக்கமான 2 பிரச்சினைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.

அக்னிவீரர் தேர்வு
அக்னிவீரர் தேர்வு

இந்த வகையில் ஹரியாணாவின் முதல் தேர்தல் பிரச்சாரமாக மகேந்திரகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களைப் போல ஆக்கியுள்ளார். நமது ராணுவத்திற்கு அக்னிவீரர் திட்டம் வேண்டாம். இது பிரதமர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட திட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை நாங்கள் முழுவதுமாக கைவிடுவோம்” என்று தீர்மானமாக அறிவித்துள்ளார்.

மேலும், "ராணுவத்தில் இரு வகையான தியாகிகள் இருப்பார்கள். ஒருவர் சாதாரண சிப்பாய்; மற்றவர் அதிகாரி. இந்த இருவரில் ராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து மற்றும் அனைத்து வசதிகளும் உண்டு. இதன் மறுபக்கத்தில், அக்னிவீரர் என்று பெயரிடப்பட்ட ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சாமானியருக்கு தியாகி அந்தஸ்தோ, ஓய்வூதியமோ, கேன்டீன் வசதிகளோ கிடைக்காது. எனவேதான் அக்னிவீரர் திட்டத்தை எதிர்க்கிறோம்” என்று ராகுல் காந்தி விளக்கினார்.

ராணுவத்துக்கு அடுத்தபடியாக, ஹரியாணாவின் பெருமைக்குரிய விவசாயிகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய வேளாண் பிரச்சினைகள் குறித்தும் ராகுல் காந்தி பேசினார். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளை சுட்டிக்காட்டி, "ஹரியாணா விவசாயிகள் வயல்களில் வியர்வை சிந்தி வருகிறார்கள். ஆனால் மோடி அரசு விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து, நிலத் தீர்ப்பாய மசோதாவை ரத்து செய்தது" என்று குற்றம் சாட்டினார்.

ஹரியாணா எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்
ஹரியாணா எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்

தொடர்ந்து சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளின் போராட்டம் குறித்து ராகுல் பேசினார். "விவசாயிகளை வேதனையில் தள்ளும் 3 வேளாண் சட்டங்கள் வந்தன. ஆனால் அவற்றுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் காரணமாக, அரசாங்கம் பின்வாங்க வேண்டியிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம்" என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in