‘பாஜகவின் புதிய தேசத்தில் விவசாயிகளை தேச விரோதிகள், பயங்கரவாதிகள் என்கிறார்கள்’ பிரச்சார மேடையில் பிரியங்கா காந்தி புகார்

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

’பாஜகவின் புதிய தேசத்தில் நாட்டுக்காக உழைக்கும் விவசாயிகளை தேச விரோதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பழிக்கிறார்கள்’ என்று கேரளாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி புகார் கூறி இருக்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விவசாயிகள் போராட்டம், 370வது சட்டப்பிரிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மோடி அரசுக்கு எதிராக இன்று கேள்விகளை எழுப்பினார்.

"பாஜகவின் இந்த 'புதிய' தேசத்தில், ஜனநாயகத்தின் செயல்முறையைத் தவிர்த்து, மக்களின் விருப்பத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான விவசாயிகள் பல மாதங்களாக வெயிலிலும், மழையிலும் போராட்டம் நடத்தினர், அவர்களில் பலர் இறந்தனர். ஆனால் அவர்களை பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று பழித்தார்கள். தங்களுக்கு எதிரான அவதூறுகளைப் பொருட்படுத்தாது அந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்” என்று பிரியங்கா காந்தே பேசினார்.

விவசாய சங்கத் தலைவர்களுடன் பிரியங்கா
விவசாய சங்கத் தலைவர்களுடன் பிரியங்கா

பிரதமர் மோடி தனது உரைகளில் ‘புதிய’ இந்தியா பிறந்திருப்பதாக அடிக்கடி சிலாகிப்பதை பிரியங்கா காந்தி மறைமுகமாக தனது உரையில் சாடி இருக்கிறார். 2020-ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிராக டெல்லி எல்லைகளில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர். அதற்கு அப்போதைக்கு மசியாத மத்திய அரசு,பின்னர் அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெறுவதாக அறிவித்து. இவற்றையே தனது கேரள பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு அப்பால் ​​ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த விவகாரத்தையும் பிரியங்கா கையில் எடுத்தார். “இந்த 'புதிய' தேசத்தில், வரவிருக்கும் தேர்தல்கள் காரணமாக சட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் நிர்ப்பந்திக்கும் வரை அவர்களின் குரல்கள் கேட்கப்படாமல் இருக்கும். இந்த 'புதிய' தேசத்தில், ஒரு மாநிலம் முழுவதும் பல மாதங்களாக இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் இல்லாமல் தவிக்கிறது. லடாக்கில் தங்கள் உரிமைகளைக் கோரி ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரளா, ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளது. இடதுசாரிகள் - காங்கிரஸ் என இரு பிரிவினரும் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியின் அங்கமாக இருந்தாலும், கேரளத்தில் நேரடி கோதாவில் குதித்துள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. மேலும் கேரள காங்கிரஸ் (எம்) ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஆலப்புழாவில் சிபிஎம் கட்சி ஒரு இடத்தில் வென்றது.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in