ஊராட்சித் தலைவர் மீது ஊழல் புகார்... துணைத் தலைவருக்கு கல்தா!

குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம்...
குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம்...

கோவையில் ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார் கூறிய துணைத்தலைவர், பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சியின் தலைவராக கீதா தங்கராஜ் பதவி வகித்து வருகிறார். துணைத்தலைவராக மூர்த்தி பதவி வகித்து வந்தார். தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கு நிலவி வந்தது. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், போலியாக ரசீது அச்சடித்து பணம் வசூலிப்பதாகவும், துணைத் தலைவர் மூர்த்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் புகார் மனு அனுப்பினார்.

குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம்
குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம்

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் கீதாவுக்கு காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை கோவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கீதா, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக் கால தடை பெற்றார்.

இந்நிலையில், துணைத்தலைவர் மூர்த்தி, தொழில் நிறுவனங்களிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் கமிஷன் கேட்பதாகவும், ஊராட்சி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், காசோலையில் கையெழுத்திட மறுப்பதாகவும், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பினர்.

கணவருடன் குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ்
கணவருடன் குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ்

இதைத் தொடர்ந்து, குன்னத்துார் ஊராட்சியில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், துணைத் தலைவர் மூர்த்தியை பதவியில் இருந்து நீக்கவும், 6-வது வார்டு உறுப்பினர் கவிதாமணியை துணைத் தலைவராக தேர்வு செய்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊராட்சி துணைத் தலைவராக கவிதாமணி செயல்படுவார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மூர்த்தி, தலைவர் மீது முறைகேடு புகார் கூறியதால், தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in