ஒரு குடும்பம் மட்டுமே ஆள்கிறது... தெலங்கானாவில் தோசை சுட்டு ராகுல் காந்தி பிரச்சாரம்!

ஒரு குடும்பம் மட்டுமே ஆள்கிறது... தெலங்கானாவில் தோசை சுட்டு ராகுல் காந்தி பிரச்சாரம்!

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோசை சுட்டு ஆதரவு திரட்டினார்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ‘விஜயபேரி’ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று கரீம்நகரில் இருந்து ஜக்டியால் மாவட்டத்துக்கு ராகுல் காந்தி சென்றார். செல்லும் வழியில் பஸ் நிறுத்தம் ஒன்றில் ராகுல் காந்தி இறங்கி மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு சாக்லெட்களையும் வழங்கினார்.

அங்கிருந்த சாலையோர கடை ஒன்றுக்கு சென்றார். அவரை கடை உரிமையாளர் வரவேற்றார். அவரிடம் நலம் விசாரித்த ராகுல், பிறகு அங்கு தோசை சுட்டுக்கொண்டிருந்த மாஸ்டரிம் பேசினார். பின்னர், ஒரு பாத்திரத்தில் இருந்த மாவை கப் மூலம் பெரிய தோசைக் கல்லில் ஊற்றி தோசைகளை சுட்டார். கடாயில் இருந்து எண்ணெய் எடுத்து கல்லில் வெந்து கொண்டிருந்த தோசை மீது ஊற்றி சுவையான தோசையை தயாரித்தார். அருகில் இருந்த கட்சி நிர்வாகிகளும் மக்களும் உற்சாக ஆரவாரம் செய்தனர்.

பின்னர் ஜக்டியாலில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது, "தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மஞ்சள் விவசாயிகளுக்கு ஆதரவு விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,000-த்தில் இருந்து ரூ.15,000 வரை கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் எல்லாப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட ரூ.500 கூடுதலாக வழங்கப்படும்.

தெலங்கானாவில் ஜனநாயக ஆட்சி நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த மாநிலம் உருவானதில் இருந்து ஒரு குடும்பம் மட்டுமே மாநிலத்தை ஆண்டு வருகிறது. என் எம்.பி பதவியை பாஜகவினர் பறித்தனர். அப்போது எனக்கு வழங்கப்பட்ட அரசு வீட்டையும் பறித்துக் கொண்டனர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப் பொருத்த வரையில் எனக்கு வீடு தேவையில்லை. இந்தியாவே என் வீடுதான். தேர்தலில் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in