மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமாக வீடு, வாகனம், நிலம் இல்லையாம்... வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் ஆச்சரியம்

யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்
யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்

மைசூரு-குடகு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், மைசூர் அரச குடும்பத்தின் வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார், தனது பிரமாணப் பத்திரத்தில் சொந்தமாக வீடு, வாகனம் மற்றும் நிலம் இல்லை என தெரிவித்திருப்பது பொதுவெளியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் மைசூரு-குடகு மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதற்காக தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் உள்ளடக்கிய பிரமாணப் பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

அந்த தகவல்களின்படி யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாருக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அவரது மனைவி த்ரிஷிகா குமாரி வாடியாரும், அவரைச் சார்ந்த இன்னொரு குடும்ப உறுப்பினருக்குமாக முறையே ரூ.1.04 கோடி மற்றும் ரூ.3.64 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. கிருஷ்ணதத்தாவிடம் ரூ.3.39 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், அவரது மனைவி வசம் ரூ.1.02 கோடி மதிப்பிலான ஆபரணங்களும் உள்ளன.

யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்
யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார்

ஆனால் புகழ்மிக்க மைசூரு அரச குடும்பத்தின் வாரிசுக்கு, அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் சொந்தமாக நிலம், வீடு, வாகனம் உள்ளிட்டவை இல்லை. இது பொதுவெளியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக அரசியல் பெரும்புள்ளிகள் தங்களது உடைமைகள் தொடர்பாக இவ்வாறு தாக்கல் செய்வது வழக்கம். ஊழல் உள்ளிட்ட முறைகேடான உபாயங்களில் சொத்துக்கள் உயர்ந்திருப்பதாக, எழ வாய்ப்புள்ள குற்றச்சாட்டுகளை தவிர்க்கவே இவ்வாறு செய்வார்கள். ஆனால், ராஜ குடும்பத்தின் வாரிசாக, பல தலைமுறைகளாக சொத்துக்களை கட்டியாளும் மைசூரு மகாராஜா குடும்பத்தின் இளவலுக்கு சொந்தமாக நிலம், வீடு, வாகனம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்துடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதனூடே இன்னொரு விவகாரமும் அந்த விவாதத்தில் சேர்ந்துள்ளது. தற்போதைய மைசூரு அரச குடும்பத்தின் வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார், தத்து முறையில் அரச குடும்பத்தினுள் நுழைந்தவர். எனவே அவர் பெயருக்கு அரச குடும்பத்து சொத்துக்கள் எதுவும் இன்னமும் சேரவில்லையா, அரச குடும்பத்தில் நீடிக்கும் குழப்பங்கள் இதற்கு காரணமா என்ற கேள்விகளையும் இவை எழுப்பியுள்ளன.

எனினும், அரச குடும்பத்துக்கான ஆதரவு மட்டுமன்றி, அப்பகுதியில் தனக்கான நற்பெயரை அறுவடை செய்யும் வகையிலும் யதுவீர் கிருஷ்ணதத்தா பாஜக வேட்பாளராக களத்தில் குதித்திருக்கிறார். அந்தளவுக்கு மைசூரு பகுதியில் கல்வி, விவசாயம், பொதுநலன் சார்ந்த நலத்திட்டங்களை தனிப்பட்ட வகையில் கிருஷ்ணதத்தா முன்னெடுத்திருக்கிறார். இவரை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான எம்.லக்ஷ்மணா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா
மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா

மைசூரு அரச குடும்பத்தில் அரசியல் புதிதல்ல. முன்னதாக ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா வாடியார் 4 முறை காங்கிரஸ் சார்பில் நின்று வென்றிருக்கிறார்; பாஜக சார்பில் ஒரு முறை நின்று தோல்வியும் அடைந்திருக்கிறார். இவரது மறைவுக்குப் பின்னரே தத்துப்பிள்ளையாக தற்போதைய மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார் மைசூர் அரச குடும்பத்தில் நுழைந்தார்.

பாஜகவின் நடப்பு எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு தொகுதியில் அதிருப்தி இல்லை என்றபோதும், நாடாளுமன்றத்தில் அத்துமீறியலில் ஈடுபட்ட சிலருக்கு அனுமதி அளித்த விவகாரத்தில், பிரதாப் சிம்ஹா பாஜகவின் தலைமையின் அதிருப்திக்கு இரையானார். எனவே மாற்று வேட்பாளரை தேட வேண்டிய அவசியத்துக்கு ஆளான பாஜக, தொகுதியில் செல்வாக்கு மிக்க மைசூர் அரச குடும்பத்தின் வாரிசை தற்போது வளைத்துப்போட்டிருக்கிறது

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in