மதுரை ஜி.ஹெச் டாக்டர்கள் ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஆப்சென்ட்.... பதற வைத்த சுற்றறிக்கை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

பயோமெட்ரிக் வருகை பதிவில் ஒரு நொடி தாமதமானாலும் கூட மருத்துவர்களுக்கு வருடாந்திர ஈட்டிய விடுப்ப கழிக்கப்படும் என அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அனைத்து மருத்துவர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியிருப்பது பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சரியான நேரத்திற்குப் பணிக்கு வருவதில்லை என்று சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

அதனால், தேசிய மருத்துவக்கவுன்சில் வழிகாட்டுதல்படி மருத்துவர்கள் தடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்படி அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை பயன்படுத்தி தங்களது வருகையைக் கட்டாயமாக காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த நடைமுறை முறையாக கண்காணிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

இந்நிலையில் கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை மருத்துவர்கள் வருகைப் பதிவை கணக்கீடு செய்து பார்த்ததில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்கள் காலை நேரங்களில் பணிக்கு சரியான நேரங்களில் வருவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதனால், மருத்துவர்கள் பணிநேரத்தில் காலையில் ஒரு நிமிடத்திற்கு தாமதமாக வந்தால் கூட அதைக் கண்டறியப்பட்டு அது ‘ஆப்சென்ட்’ ஆக கணக்கிடப்படும் என்றும் ஈட்டிய விடுப்பில் இருந்து அந்த நாட்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி கழித்துக் கொள்ளப்படும் என்று அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், மருத்துவப்பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

மேலும், அந்த சுற்றறிக்கையில் மருத்துவர்கள் அலுவலக வேலையாக வெளியே சென்றாலும் அல்லது வேறு அலுவலக பணியாகச் சென்றாலும் அது குறித்து சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்படி பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அது விடுமுறையாகவோ அல்லது வராமல் போனதாகவோ கருதப்பட்டு அவர்களது ஈட்டிய விடுப்பில் கழித்துக் கொள்ளப்படும் என அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளது.

இது பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in