புதிதாக உருவான மணல் குவாரிகள்: கரூர் மக்கள் கடும் எதிர்ப்பு

கரூர் மணல் குவாரிகள்
கரூர் மணல் குவாரிகள்

கரூர் காவிரி ஆற்றில் 2 புதிய மணல் குவாரிகளை அமைத்துள்ளதற்கு உள்ளூர் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு இருந்து வருகிறது. இதேபோல் இங்கிருந்து கூட்டு குடிநீர் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் குடிநீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரில் புதிதாக 2 இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து சமீபத்தில் உத்தரவிட்டது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது நேரூர் வடபாகம் கிராமத்தில் 16.05 ஹெக்டேர் மற்றும் அச்சமாபுரம் பகுதியில் 24 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரிகள் அமைத்திருப்பது தொடர்பாக கருத்துக்கள் பகிரப்பட்டது.

கரூர் மணல் குவாரிகள்
கரூர் மணல் குவாரிகள்

இந்த கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், சாமானிய மக்கள் நலக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதிதாக மணல் குவாரிகள் அமைத்திருப்பதின் காரணமாக, காவிரியில் நீர்வரத்து கடுமையாக குறையும் எனவும் இதனால் சுமார் 140 கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனவும் அப்போது குற்றம் சாட்டினர்.

இந்த புதிய மணல் குவாரிகள் செயல்படுத்தப்பட்டால், வருடத்தில் ஆறு மாதங்கள் வரையிலும், குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. எனவே புதிய குவாரிகள் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என, எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர். ஏற்கெனவே கரூரில் பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் மணல் எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in