யாரிந்த கிஷோரி லால் சர்மா? ஸ்மிருதி இரானிக்கு எதிராக காங்கிரஸ் களமிறக்கிய சீனியர் செயல்வீரர்

ஸ்மிருதி இரானி - கே.எல்.சர்மா
ஸ்மிருதி இரானி - கே.எல்.சர்மா

கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்த அமேதி மக்களவைத் தொகுதியில் இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் கிஷோரி லால் சர்மா. காங்கிரஸ் கட்சியில் சாதாரணர் என்ற போதும், அமேதி தொகுதியில் மக்கள் மத்தியில் பரிச்சயம் கொண்டவர் என்பதாலும், கிஷோரி லால் சர்மா குறித்து பாஜக தரப்பில் எச்சரிக்கை கொண்டிருக்கிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள ரேபரேலி, அமேதி ஆகியவை நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பிரதான தொகுதியாக இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்கள் மற்றும் பிரதமர்களை பலமுறை தேர்ந்தெடுத்த பெருமை இந்த தொகுதிக்கு உண்டு. ஆனால் அமேதி தொகுதியில் 2004 முதல் தொடர்ந்து 3 முறை எம்பியாக தேர்வான ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். மத்திய அமைச்சரான பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோற்றார்.

ஸ்மிருதி இரானி - ராகுல் யாத்திரையில் சர்மா
ஸ்மிருதி இரானி - ராகுல் யாத்திரையில் சர்மா

ராகுல் காந்தி போட்டியிட்ட இன்னொரு தொகுதியான கேரளத்தின் வயநாடு வெற்றி வாயிலாக அவர் மக்களவைக்கு சென்றார். இம்முறையும் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தான் தோல்வியுற்ற அமேதி தொகுதியை தவிர்த்து விட்டார். தாய் சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியானதால் காலியான ரேபரேலி தொகுதியில் தற்போது ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனிடையே அமேதி தொகுதியின் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் பதில் கிடைத்தது.

ராஜிவ் காந்தி காலம்தொட்டு அமேதி தொகுதியில் களப்பணியாற்றி வரும் கிஷோரி லால் சர்மா, அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தியை தொடர்ந்து கடந்த 40 அண்டுகளாக அங்கே தேர்தல் பணி முதல் மக்கள் நலப்பணி வரை, காங்கிரஸ் சார்பாக களத்தில் இறங்கி வேலை பார்த்த அனுபவம் சர்மாவுக்கு உண்டு. அமேதி தொகுதியில் சகலமும் அவருக்கு அத்துப்படியானது. மக்களுடன் எளிதாக ஊடாடுவதிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். எதிர்பார்க்கப்பட்ட பெருந்தலைகளுக்கு பதிலாக தொகுதிக்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தியதில் காங்கிரஸ் கட்சியும் வியூக அடிப்படையில் ஸ்கோர் செய்திருக்கிறது.

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கே.எல்.சர்மா, சாமானிய காங்கிரஸ் நிர்வாகியாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். ராஜிவ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை குடும்பத்தின் அனைவரிடமும் நெருக்கம் கொண்டவர். அமேதி வேட்பாளரை அறிவிக்கும் மே.3 அன்று அதிகாலையில்தான் அவருகே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தலைமையின் உத்தரவு எதுவானாலும் நடைமுறைப்படுத்தியே தீர்வது என்ற கங்கணத்துடன் அவரும் களத்தில் இறங்கிவிட்டார். கே.எல்.சர்மாவின் வேகம் பார்த்து எரிச்சலான எதிர்முகாமின் மர்ம நபர்கள் சிலர் அமேதியில் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதலும் தொடுத்தனர். ஆனாலும் சர்மா அசரவில்லை. வீதிவீதியாக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

பிரியங்கா காந்தி உடன் பிரச்சாரத்தில் சர்மா
பிரியங்கா காந்தி உடன் பிரச்சாரத்தில் சர்மா

இவை தொடர்பாக அவர் பேசுகையில் ”கடந்த 40 வருடங்களாக மாதத்தில் குறைந்தது 10 நாட்களேனும் அமேதியில் கழித்திருப்பேன். தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கும் இடையே பாலமாக எனது சேவையை தொடர்ந்திருக்கிறேன். இப்போது பாஜகவினரின் பிரச்சாரத்தை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் தங்களது கடந்த 5 ஆண்டு பணிகளை சொல்லி வாக்கு கேட்பார்கள்; நாங்கள் 1982 முதல் அமேதிக்கான எங்கள் சேவையை சொல்லி வாக்கு கேட்போம்.

2019-ல் அமேதி தொகுதியின் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தன. ஆனபோதும் அதில் அமேதி மக்களின் பங்கு குறைவே. அரசு மற்றும் அரசு எந்திரத்தின் பங்கு மக்களை பாதித்தது. நாங்களும் சில தவறுகளை செய்தோம். அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பை இழந்தோம். இவையே அமேதி தோல்விக்கு காரணம். இம்முறை அவற்றை தவிர்ப்போம். அமேதி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் கிஷோரி லால் சர்மா.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in