மகனுக்கு எதிராக முதலில் பிரச்சாரம்... தந்தைக்கு இப்போது குறி: கர்நாடகாவை கலக்கும் நடிகர் தர்ஷன்!

சுமலதாவுடன் நடிகர் தர்ஷன்.
சுமலதாவுடன் நடிகர் தர்ஷன்.

மாண்டியா தொகுதியில் போட்டியிடும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிராக நடிகர் தர்ஷன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவதால் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு மண்டியா, ஹாசன், கோலார் (தனி) ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூரு ஊரக தொகுதியில் தேவகவுடாவின் மருமகன் மருத்துவர் மஞ்சுநாத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் ஏப்.26 மற்றும் மே 7 தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

குமாரசாமி - தேவகவுடா
குமாரசாமி - தேவகவுடா

மஜத மாநிலத் தலைவரும். முன்னாள் முதல்வருமான குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்டார் சந்துரு என்று அழைக்கப்படும் வெங்கடரமண கவுடா போட்டியிடுகிறார். இவருக்கும், குமாரசாமிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.

மாண்டியா தொகுதி முன்னாள் எம்.பி-யான சுமலதா பாஜகவில் இணைந்தாலும், குமாரசாமிக்கு ஆதரவாக அவர் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. இந்த நிலையில், குமாரசாமிக்கு எதிராக கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன் களமிறங்கியுள்ளார். இவருக்கு மாண்டியா தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

மாண்டியாவில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தர்ஷன் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த ரசிகர்களின் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால் அக்கட்சி வேட்பாளர் ஸ்டார் சந்துரு எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஸ்டார் சந்துரு கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்

இந்த நிலையில், குமாரசாமிக்கு எதிராக நடிகர் தர்ஷனும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவதால் பாஜக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில், கடந்த 2019-ம் ஆண்டு மதச்சார்பற்ற கட்சி சார்பில் போட்டியிட்ட குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியின் தோல்விக்கு நடிகர் தர்ஷனின் சூறாவளி பிரச்சாரம் காரணமாகும். அவர் நடிகர் யாஷுடன் இணைந்து ஒரு மாதம் பிரச்சாரம் செய்தார்.

தற்போது நிகிலின் தந்தையான குமாரசாமிக்கு எதிராக நடிகர் தர்ஷன் மாண்டியாவில் களமிறங்கியுள்ளார். நடிகை சுமலதாவின் மவுனமும், தர்ஷனின் வருகையும் குமாரசாமிக்கு இரட்டை பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு கூறுகையில், “தர்ஷன் என்னுடைய பழைய நண்பர். அவரை பிரச்சாரத்துக்கு வரச் சொன்னேன். அதற்கு சம்மதித்து இன்று பிரசாரத்துக்கு வந்துள்ளார். இதனால் மாண்டியா தொகுதியில் 100 சதவீதம் வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு
காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துரு

காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வரும் தர்ஷனுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் இணைந்து வாக்குசேகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in