முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

நாளை நடைபெறும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதலமைச்சர்கள் , ஒரு முன்னாள் ஆளுநர்  ஆகியோர் களம் காண்கின்றனர்.

எல்.முருகன்
எல்.முருகன்

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில்  தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த முதற்கட்ட தேர்தல் 8 மத்திய அமைச்சர்கள் , 3 முன்னாள் முதல்வர்கள், ஒரு முன்னாள் ஆளுநரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது. தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக  இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தென்சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

மேற்கு திரிபுரா தொகுதியில் மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தேவ் பாஜக சார்பில் களமிறங்கி இருக்கிறார்.  இவருக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சகாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அருணாசலப் பிரதேசம்  மேற்கு தொகுதியில் அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான  நபம் துகி களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 4-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். 

மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால்  அசாமின் திப்ரூகார் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை  எம்.பி.யாக இருக்கும் இவர் முன்னாள் முதல்வராவார். இவரது வெற்றிக்கு பாஜகவினர் கடுமையாக வேலைபார்த்து வருகின்றனர்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மராட்டியத்தின் நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார். மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவரை எதிர்த்து திமுக. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அந்த தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஹரிந்திர மாலிக், பகுஜன் சமாஜ் வேட்பாளர் தாராசிங் பிரஜாபதி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் ராஜஸ்தானின் பீகானேர் தொகுதியிலும், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீரின் உதம்பூர் தொகுதியிலும்,  ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோரும் நாளைய தேர்தலில் களத்தில் உள்ளனர். இவர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்று மக்களவைக்கு செல்ல உள்ளார்கள் என்பது ஜூன்  4- ம் தேதி தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in