தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர் போல இருக்கிறார்கள்... காங்கிரஸின் சாம் பிட்ரோடா கருத்தை சர்ச்சையாக்கும் கங்கனா

சாம் பிட்ரோடா
சாம் பிட்ரோடா

இந்தியர்களின் பன்முகத் தன்மையை விவரித்த காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா பேச்சை, இனவெறியுடனான கருத்தாக பாஜகவின் கங்கனா ரனாவத் சாடி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா. இவர் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரபூர்வ ஆலோசகராக இருந்தவர். தற்போது ராகுல் காந்தியின் வழிகாட்டிகளில் ஒருவராகவும் சாம் பிட்ரோடா இருப்பதாக பாஜக தெரிவித்து வருகிறது.

அண்மையில் சொத்துரிமை என்பதை மையமிட்டு சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து, மக்களவைத் தேர்தல் மேடைகளில் பாஜகவால் பெரும் விவாதமாக எழுப்பப்பட்டது. நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உள்ளது என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்தையும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் முடிச்சிட்டு பாஜக அண்மையில் காங்கிரஸாரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்காவில் அமலில் உள்ள பரம்பரை சொத்து வரி சட்டம் குறித்து நினைவூட்டிய சாம் பிட்ரோடா, ’அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை. இது குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதனை முன்வைத்து, ‘நீங்கள் இறந்த பிறகு காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து சொத்துக்களை பறித்து வேறு ஒருவருக்கு வழங்கப் பார்க்கிறது’ என்று பாஜக தாக்குதல் தொடுத்தது. சுதாரித்த காங்கிரஸ் கட்சி, அது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என ஜகா வாங்கியது.

தற்போது இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் சாம் பிட்ரோடாவின் பேச்சை முன்வைத்து, பாஜகவின் மண்டி தொகுதி வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஊடகப்பேட்டி ஒன்றில் பேசும் சாம் பிட்ரோடா ”இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை நாம் சிறப்பாக வைத்திருக்க முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களாகவும், தெற்கே உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

மேலும். உலகில் ஜனநாயகத்திற்கு இந்தியா எப்படி ஒரு சிறந்த உதாரணம் என்பதைப் பற்றி பேசிய சாம் பிட்ரோடா, "இந்தியர்கள் 75 வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் சில சண்டைகள் எழுந்தாலும், அதனை புறந்தள்ளி மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். இதுதான் நான் நம்பும் இந்தியா. அங்கு அனைவருக்கும் ஓரிடம் உள்ளது. மக்கள் எல்லோருமே கொஞ்சமேனும் சமரசம் செய்கிறார்கள்” என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

கூடவே பாஜக ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் எல்லாம் மாறியிருப்பதை சுட்டிக்காட்டி, ’ஜனநாயகம், சுதந்திரம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா என்ற எண்ணம் இப்போது ‘ராம நவமி’, ‘ராமர் கோயில்’ ஆகியவற்றால் சவாலுக்கு ஆளாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தலைவராக இருப்பதைவிட பாஜகவின் தலைவராகவே நடந்துகொள்கிறார்” என்றும் சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.

சாம் பிட்ரோடாவின் ’பரம்பரை வரி’ குறித்தான கருத்து பாஜகவால் முன்னர் கண்டனத்துக்கு ஆளானதன் வரிசையில், அவரது தற்போதைய கருத்தும் சர்ச்சையாகி உள்ளது. பாஜகவின் இமாச்சல பிரதேசம் மண்டியின் வேட்பாளரான கங்கனா ரனாவத், ”சாம் பிட்ரோடா, ராகுல் காந்தியின் வழிகாட்டி. இந்தியர்கள் மீதான இனவெறி மற்றும் பிளவுபடுத்தும் அவரது அவதூறுகளைக் கேளுங்கள். அவர்களின் முழு சித்தாந்தமும் பிரித்து ஆட்சி செய்வது பற்றியதாகும். சக இந்தியர்களை சீனர்கள் என்றும் ஆப்பிரிக்கர்கள் என்றும் அழைப்பது வேதனை அளிக்கிறது. காங்கிரசுக்கு வெட்கக்கேடு!” என்று தனது எக்ஸ் தள பதிவில் சாடி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in