சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

தாங்க முடியாத அளவுக்கு கடும் வெப்பம் வாட்டிவந்த நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்து உள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

இந்த ஆண்டு கோடைக்காலம் முறைப்படி தொடங்குவதற்கு முன்பிருந்தே அதிக அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக 100 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரம் காலம் நடைபெற்று வருவதால் கத்திரி வெயில் நிலவுகிறது.

மே 7-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததால். மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களை நேற்று பகலில் ஏமாற்றிய மழை இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக வந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.  திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர், அடையாறு, கோட்டூர்புரம் என சென்னையின் பல்வேறு  பகுதிகளில் இந்த மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது. 6 மணி வரை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது.  இதே போல கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்பம் குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in