தேர்தலை ரத்து செய்யுங்க... சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா!

தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ
தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் மாஸ்கோ என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 19 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளராக தமிழ் வேந்தன், பாஜக வேட்பாளராக புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம்,  காங்கிரஸ் வேட்பாளராக கட்சியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் பிரதானமாக களத்தில் உள்ளனர். 

அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரண்டு வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. பாஜக தரப்பில் வாக்காளர்களுக்கு ரூபாய் 500, காங்கிரஸ் தரப்பில் ரூபாய் 200 தரப்படுவதாக குற்றம் சாட்டிய அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். 

பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தி, தேர்தலை  நியாயமாக நடத்தத் தவறினால் இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர் நேற்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டை சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோவும் உறுதி செய்துள்ளார். 

இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி இறைப்பதாகவும் இதனால் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஒதியம்பட்டு சந்திப்பில் இன்று காலை திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதை அறிந்த போலீஸார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பதாக கூறி அவரை அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர். 

பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளரைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளரும் போர்க்கொடி தூக்கியுள்ளது புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in