கிளாம்பாக்கம் அவதி தொடர்ந்தால்... அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி அடைவது தொடர்ந்தால், சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும் என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் இனி செயல்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், தென் தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்தே புறப்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போதுமான இணைப்புப் பேருந்துகள் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று இரவு தென் மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்திருந்த நிலையில், போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதன் காரணமாக, 300-க்கும் மேற்பட்டோர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘கிளம்பாக்கத்தில் பயணிகள் அவதி அடைவது தொடர்ந்தால், சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும்’ என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது பதிவில், ”திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இருக்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நாற்பது நாட்கள் கடந்தும், பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீரவில்லை.

போதிய முன்பதிவில்லா பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி
போதிய முன்பதிவில்லா பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

நேற்று இரவு, வெளியூர்களுக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கம் வந்த பயணிகள் பேருந்துகள் இல்லாமல் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மெழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in