கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடியவிடிய பயணிகள் சாலை மறியல் போராட்டம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடியவிடிய பயணிகள் சாலை மறியல் போராட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமங்களுடன் கிளாம்பாக்கம் சென்று, பின்னர் அங்கிருந்து முன்பதிவு செய்த பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.

போதிய பேருந்துகள் இல்லை என போலீஸாருடன் பயணிகள் வாக்குவாதம்
போதிய பேருந்துகள் இல்லை என போலீஸாருடன் பயணிகள் வாக்குவாதம்

இதனிடையே ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் எனவும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்ததற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான வழக்கில், கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, இணைப்பு பேருந்துகள் குறைவாக இருப்பதாக கூறி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.

குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் என தகவல்
குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் என தகவல்

இந்நிலையில் நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள், போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடங்கியது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வார இறுதி நாள் என்பதால் சென்னையில் பணிபுரியும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால், பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக மற்ற பயணிகளை நடத்துநர் ஏற்றவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்ததால் கூடுவாஞ்சேரி சரக துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நடைமேடைகளில் படுத்து உறங்கினர். வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் இந்த குழப்பம் நடைபெற்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in