ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யச் சொன்ன ஹைகோர்ட்: திமுகவிற்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற மனுதாரர்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளைப் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி, பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கூறி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர், போராட்டம் அறிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது எனவும், இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையும், மாறா பற்றும் கொண்டிருப்பதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர், சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகவும், எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே துவங்கியுள்ளதால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது எனவும், நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும் எனவும், படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது எனவும், இதுபோல பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது எனவும் தெரிவித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறிய போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, முடித்து வைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொதுநல வழக்குகளை ஏற்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!

குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?

அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!

ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in