ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

`முட்டையை தூக்கி காண்பிக்கும் தம்பி உதயநிதி முதலில் இதைப் பாருங்கள்'- ஆளுநர் தமிழிசை காட்டம்

"முட்டையை தூக்கி காண்பிக்கும் தம்பி உதயநிதி முதலில் இதைப் பாருங்கள்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநாட்டுக்காக வந்துள்ளேன். இந்தக் கொள்கை எல்லா மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி அறையில் இருந்து உலக அளவுக்கு மாணவர்களை உயர்த்துவதற்காகவே இந்தக் கொள்கை. ஆனால் தமிழகத்தில் அது அரசியல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது வேதனை.

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு என்றார்கள். ஆனால் இந்த கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்து தான் இது என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து தற்போது நீட்டை பற்றித் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும் பிரச்சினை இல்லை. தம்பி உதயநிதியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் முட்டையை தூக்கி காண்பித்தீர்கள், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 1,200 முட்டைகள் அழுகி இருந்ததாம். அதனால் அங்கு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இதை முதலில் பாருங்கள்.

தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை மன வருத்தமாக இருக்கிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டத்துக்கு துணை ராணுவத்தை வைத்து நாங்கள் நடத்தவா என்று நீதிமன்றம் கேட்கிறது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்கப் பாருங்கள்" என்று கூறினார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in