பரபரப்பு... அமைச்சர் அன்பில் மகேஷ் காரை முற்றுகையிட்டு  விவசாயிகள் ஆவேசம்!

பரபரப்பு... அமைச்சர் அன்பில் மகேஷ் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் சுற்று பயணம் மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காரை திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை, ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்கான தொகையை வழங்கவில்லை. மேலும், கரும்பு ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் போலியாக வங்கிகளில் ரூ.300 கோடி வரை கடன் பெற்று ஏமாற்றியுள்ளது.

இதனால், விவசாயிகள் வங்கிகளில் கல்விக் கடன், விவசாயக் கடன் ஏதும் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்த சர்க்கரை ஆலையை தனியார் நிறுவனம் வாங்கி, சர்க்கரை ஆலையை மீண்டும் நடத்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கக் கோரியும், வங்கியின் கடன் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

320-வது நாளாக கரும்பு விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருமண்டங்குடி அருகே உள்ள கூனஞ்சேரியில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழாவுக்கு நேற்று மாலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருமண்டங்குடி வழியாக செல்கிறார் என தகவல் கிடைத்ததால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகள், அமைச்சர் இந்த வழியாக செல்லும்போது, அவரை சந்தித்து முறையிட திட்டமிட்டனர். ஆனால், இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், போலீஸார் அமைச்சரை 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி, பட்டவர்த்தி கிராமம் வழியாக கூனஞ்சேரிக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கரும்பு விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் குறுக்குப் பாதையில் சென்று கூனஞ்சேரி கிராமத்துக்கு வரும் வழியில் அமைச்சரின் காரை வழிமறித்து, முற்றுகையிட்டனர்.

அப்போது, கரும்பு விவசாயிகள், ‘‘போராட்டத்தின் 150-வது நாளில் தங்களை சந்தித்து எங்களது கோரிக்கையை வலியுறுத்தி எடுத்துரைத்தோம். ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எங்களை ஏமாற்றி வரும் இந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் நடத்துகிறோம்’’ என அமைச்சரிடம் கூறினர்.

அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகளின் போராட்டம் என்பது வருத்தமாகதான் உள்ளது என்றார். அதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டாம், உரிய நடவடிக்கையை எடுங்கள் என விவசாயிகள் கூறினர். தொடர்ந்து, ஆலையை எங்கள்வசம் ஒப்படையுங்கள், நாங்கள் நடத்துகிறோம் என்றனர் விவசாயிகள்.

அதற்கு அமைச்சர் அப்படி என்றால், ‘‘நீங்கள் கடிதம் கொடுங்கள்’’ நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன், நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் என்றார். இதையடுத்து போலீஸார் மற்றும் அமைச்சருடன் வந்தவர்கள் விவசாயிகளை சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் அமைச்சர் சென்ற காருக்கு வழிவிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் காரில், எம்பிக்கள் செ.ராமலிங்கம், சு.கல்யாண சுந்தரம், எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் இருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in