மக்களவையில் மத்திய அரசின் சார்பில் பொருளாதார வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான பொருளாதார நிலையையும், அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது நாட்டில் நிலவிய பொருளாதார நிலை குறித்தும் மத்திய அரசின் சார்பில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
2004-14 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், பொருளாதாரம் பலவீனமாக இருந்ததாகவும் பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளதாகவும், பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம், இந்தியில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக பொருளாதாரத்தை மந்தமாக்கியது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றபோது, பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. வாராக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
மன்மோகன் சிங் அரசு பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. காமன்வெல்த் போட்டியிலும் பெரிய ஊழல் நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவில் இருந்தன. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மோசமாக இருந்தன. தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு சிலருக்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அனுமதி அளித்துள்ளது. அந்நிய செலாவணி குறைந்த அளவில் கையிருப்பு இருந்தது. தவறான பொருளாதார நிர்வாகம், நிதி ஒழுங்கற்ற தன்மை இருந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.
தற்போது நாங்கள் பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டு, சீரான வரிசையில் கொண்டு வருவதற்கான பணிகள் அளப்பரியதாக இருந்தது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதோடு வளர்ச்சி பாதையில் கொண்டு வந்துள்ளோம். வெளிநாடுகளில் இந்திய பணத்தின் மதிப்பு கூடியுள்ளது. அரசின் நடவடிக்கைகளால் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி நிதி இழப்பு தடுக்கப்பட்டது. இதனால், உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா ஒன்றாக உயர்ந்துள்ளது. விரைவில் நமது நாடு உலகின் 3-வது பொருளாதாரமாக உருவாகும்” இவ்வாறு இந்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!
அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!
நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!