பாஜகவுக்கு பக்கா பதிலடி... கோவைக்கு பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக!

கோவைக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கோவைக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

கோவை மக்களவைத் தொகுதிக்கு தனியாக ‘கோவை ரைசிங்’ என்ற பெயரிலான தனி தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது.

ஒரு பக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறுபக்கம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து இடங்களிலும் வென்ற அதிமுக கூட்டணி, என பலமான எதிர்ப்புக்கிடையே திமுக கோவை மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ-வான நா.கார்த்திக், திமுக தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மக்களவைத் தொகுதிக்கு என தனியாக தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். திமுக சார்பில் ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ’கோவை ரைசிங்’ என்ற பெயரில் கோவை மக்களவைத் தொகுதிக்கு என தனியாக தேர்தல் அறிக்கையை இன்று திமுக வெளியிட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ’கோவை ரைசிங்’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

கோவைக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக
கோவைக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக

இந்த தேர்தல் அறிக்கையில், ’அவிநாசி சாலை, உக்கடத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். சாய்பாபா காலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை-கோவை-தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். கோவையில் நீர் நிலைகளில் மாசு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை ரைசிங் பாடலில் வரும் ஒரு காட்சி
கோவை ரைசிங் பாடலில் வரும் ஒரு காட்சி

‘வால்பாறை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும். மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட மலையேற்ற சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்படும். பூண்டி வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் நிரந்தர மருத்துவ முகாம் அமைக்கப்படும். சிபிஆர் கருவிகள் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் ஏற்படுத்தப்படும். விமான நிலைய ரயில் நிலையம் அமைக்கப்படும். நீர் வாரிய சாலை வேலைகள் விரைந்து முடிக்கப்படும்.’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ’கோவை ரைசிங்’ வாக்குறுதிகளை சுட்டிக்காட்டும் வகையில் வீடியோ ஒன்றை நேற்று திமுக தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in