'தகுதியற்றவர்' சபையில் சொல்லக்கூடாத சொல் இல்லை... நாடாளுமன்ற களேபரத்துக்குப் பின் டி.ஆர்.பாலு பேட்டி!

எம்.பி-க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு
எம்.பி-க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு

'தகுதியற்றவர்' என்பது சபையில் சொல்லக்கூடாத சொல் அல்ல என, மக்களவையில் நடந்த களேபரத்துக்குப் பின் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று திமுக எம்.பி-க்கள் ஆ.ராசா, கணேசமூர்த்தி, டி.ஆர்.பாலு ஆகியோர் பேரிடர் நிவாரண நிதி குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசிக் கொண்டிருந்தார்.

மக்களவையில் எம்.பி- டி.ஆர்.பாலு
மக்களவையில் எம்.பி- டி.ஆர்.பாலு

அப்போது, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, மீன்வளம், கால்நடைத் துறை இணை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.முருகன் திடீரென குறுக்கிட்டு திமுக உறுப்பினர்கள் பொருத்தமில்லாத கேள்விகளை கேட்பதாக கூறினார்.

இதனால், எல்.முருகனை நோக்கி, எம்.பி- டி.ஆர்.பாலு, "நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். நீங்கள் தயவுகூர்ந்து அமருங்கள். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க நீங்கள் தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராக இருக்க தகுதியற்றவர்" என ஆவேசத்துடன் கூறினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, எம்.பி- டி.ஆர்.பாலு, ‘தகுதியற்றவர்' எனக் குறிப்பிட்டதால் அவையில் பாஜக-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எம்.பி - டி.ஆர்.பாலுவுக்கு எதிராக பேசிய பாஜக உறுப்பினர்கள்
எம்.பி - டி.ஆர்.பாலுவுக்கு எதிராக பேசிய பாஜக உறுப்பினர்கள்

மத்திய, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பேசுகையில், தலித் சமூகத்தை சேர்ந்த அமைச்சரை, எம்.பி-டி.ஆர்.பாலு அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுக – பாஜக இடையே மோதல் தலைதூக்கியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், எம்.பி-டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே அவை நடவடிக்கை முடிந்ததும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த எம்.பி- டி.ஆர்.பாலுவிடம் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், “அவர் (எல்.முருகன்) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராகப் பேசினார். அதனால்தான் அவரை துரோகி என நாங்கள் சொன்னோம். 'தகுதியற்றவர்' என்ற வார்த்தை சபையில் சொல்லக்கூடாத சொல் அல்ல” என்றார். டி.ஆர்.பாலு தலித்துகளை அவமதித்துவிட்டதாக பாஜக கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, குறுக்கிட்ட எம்பி- ஆ.ராசா, "நானும் ஒரு தலித் தான்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in