அண்ணாமலை ஒரு நாகரிகமற்ற அரசியல்வாதி! - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்

ஜோதிமணி எம்.பி.,
ஜோதிமணி எம்.பி.,

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தகுந்த ஒருங்கிணைப்பு ஏற்படும் வகையில் செயல்படவில்லை, ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணமாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு பலவாறு எழுந்திருக்கிறது. நிதிஷ்குமார் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் தனியாகவே 65 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார்.  

மத்தியப்பிரதேசம், தெலங்கானாவில் கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் இடமளிக்கவில்லை என்பதும்,  ராகுல் வென்ற கேரளாவின் வயநாட்டில் ராகுல் போட்டியிடக் கூடாது என்று இடதுசாரிகள் சொல்லி வருவதுமாக இந்தியா கூட்டணியில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணியுடன் இதுகுறித்து பேசினோம்.

உங்களுக்கு கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பணம் கொடுத்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாரே..? 

அதற்கு நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன். அவருக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறையை ஏவி என்னிடம் சோதனை நடத்தட்டும். இதற்கு ஆதாரம் இருக்கிறது  என்று  அவர் சொல்லியிருக்கிறார். அப்படி இருந்தால் அந்த ஆதாரத்தை வெளியிடட்டும். அவர் ஆதாரத்தை காண்பித்தால் அவர் என்ன சவால் விடுகிறாரோ அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.

ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் அவர் சந்திக்கின்ற சவால்கள் இப்படித்தான் இருக்கிறது. சில நாலந்தர அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்வார்கள் என்பதாகத்தான் நான் இதை உணர்ந்து கொள்கிறேன். 

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை இப்படி பேசி இருப்பதன் பின்னணி எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

பொதுவாகவே தமிழக பாஜக என்பது ஆபாசத்தை முன்வைத்து இயங்குகிற ஒரு கட்சிதான். அது ஒரு ஆடியோ, வீடியோ கட்சியாகவே அறியப்படுகிறது. அந்த ஆடியோ, வீடியோக்கள் அனைத்துமே அண்ணாமலை தலைவராக வந்த பிறகுதான் வெளியாகிறது.  அடிப்படையில் அண்ணாமலை ஒரு நாகரிகமற்ற அரசியல்வாதி. அது மட்டுமில்லை... அவர் ஊழல் மலிந்தவர்; நேர்மையற்றவர்.

அகிலேஷ் யாதவுடன் ராகுல்
அகிலேஷ் யாதவுடன் ராகுல்

எதைவைத்து இப்படி குற்றம்சாட்டுகிறீர்கள்? 

மணல் மாஃபியாக்களிடமிருந்து மாதம் 60 லட்சம் ரூபாய் அண்ணாமலை பெறுவதாகவும், அதை மோப்பம் பிடித்து அமலாக்கத்துறை சோதனைக்கு சென்றதாகவும்,  அண்ணாமலை அலுவலகம் இருக்கிற இடத்துடன் அவர்கள் தொடர்புடையவர்கள் என்பதால் அமலாக்கத்துறை திரும்பி வந்துவிட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானதே... அதை அண்ணாமலை மறுத்தாரா? 

கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  ஆனால், தனிப்பெரும் கட்சியாக கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. அதனால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்கள். மூன்று நாட்களுக்கு எடியூரப்பா ஆட்சியில் இருந்தார். அப்போது சிக்மகளூர் எஸ்.பி-யாக இருந்த அண்ணாமலையை ராம்நகருக்கு சிறப்பு பணியாக எடியூரப்பா அரசாங்கம் மாற்றுகிறது.  அதற்குக் காரணம்,  அங்குதான் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப் பட்டிருந்தார்கள்.

ஒரு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், மற்ற கட்சியிலிருந்து எம்எல்ஏ-க்களை தூக்கி குதிரை பேரம் நடத்தும் வாய்ப்பு இருந்த சூழ்நிலையில்,  ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக தன்னைச் சொல்லிக்கொண்ட அண்ணாமலையை அங்கு எதற்காக அவர்கள் பணியமர்த்த வேண்டும்? காசு வாங்காதவராக நேர்மையானவராக இருந்திருந்தால் பாஜகவின் ஏஜெண்டாக  இல்லாமல் இருந்திருந்தால் அவரை அழைத்திருப்பார்களா?  அண்ணாமலை கர்நாடகாவில் காவல்துறையில் இருந்த ஒரு கருப்பு ஆடு. காசு வாங்கிக் கொண்டு பாஜகவின் ஏஜெண்டாக இருந்தவர்தான் அண்ணாமலை. 

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி

தமிழ்நாட்டில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களே... அது நடக்குமா? 

தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி தொகுதிகளை எல்லாம் பேசி முடிவு செய்யும். எத்தனைத் தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதெல்லாம் அந்தக் குழுவும், டெல்லி தலைமையும் முடிவுசெய்யும்.

தொகுதியில் ஜோதிமணி
தொகுதியில் ஜோதிமணி

இந்தியா கூட்டணியில்  அகிலேஷ் யாதவ்,  நிதிஷ்குமார் போன்றவர்கள் காங்கிரஸ் மீது அதிருப்தி தெரிவித்து வருகிறார்களே... இதை காங்கிரஸ் எப்படி சமாளிக்கப் போகிறது? 

ஐந்து மாநில தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்குமே இது வாழ்வா சாவா என்பதான தேர்தல். இந்தத் தேர்தல்களின் முடிவுகள் நிச்சயமாக மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும். அதுமட்டு மில்லாமல் இந்த ஐந்து மாநிலங்களிலுமே இந்தியா கூட்டணியில் இருக்கிற பிற கட்சிகள் அதிக வலுவுடன் இல்லை.  அங்கெல்லாம் காங்கிரசுக்கும் வேறொரு கட்சிக்குமான நேரடி போட்டிதான் நிலவி வருகிறது.  உதாரணத்திற்கு, தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் நேரடிப்போட்டி நிலவுகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பிஜேபி-க்கும் காங்கிரசுக்கும் நேரடிப்போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் இப்படி இருப்பதால் அதை சமாளிக்க காங்கிரஸ் கட்சி கவனமாக இருக்கிறது; அவ்வளவுதான். 

காங்கிரஸ் பலமான போட்டியாளராக இருப்பதில் தவறில்லை. ஆனால், அங்கெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதும், காங்கிரஸ் பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்கிறது என்பதும் தானே குற்றச்சாட்டு? 

அது தேர்தல்களில் நடக்கக்கூடிய ஒன்றுதான். உதாரணத்துக்கு, உத்தரப்பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் இடைத்தேர்தல்கள் நடந்தபோது உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் சமாஜ்வாடிக்கு ஆதரவு அளித்தோம். அதனால் அங்கு சமாஜ்வாடி வெற்றி பெற்றது. ஆனால், உத்தராகண்ட்டில்  காங்கிரசுக்கு அந்தக்கட்சி ஆதரவளிக்கவில்லை. அவர்கள் ஒரு வேட்பாளரை நிறுத்தி குறைந்த வாக்குகள் பெற்று எங்களுடைய வெற்றி வாய்ப்பையும் தடுத்துவிட்டார்கள். ஆக, காங்கிரஸிடம் எந்த தவறும் இல்லை. கூட்டணியில் இருக்கும் பிறகட்சிகளும் கூட்டணி தர்மத்தை சரியாகக் கடைபிடிக்க வேண்டும். காங்கிரஸைப் பொறுத்தவரையில் கூட்டணி விஷயத்தில் சரியாகவே நடந்து வருகிறது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி ஒற்றுமையாகவும், வலிமையாகவும் இருக்க காங்கிரஸ் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? 

அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப  விட்டுக்கொடுத்து, காங்கிரஸ் தன்னை தகவமைத்துக் கொள்கிறது.  உதாரணத்திற்கு, நிதிஷ்குமார் வருத்தமாக பேசியதை அடுத்து உடனடியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரிடம் பேசி நிலைமையை விளக்கி சமாதானப்படுத்தினார். இப்போது அந்த பிரச்சினை சரியாகி விட்டது. 

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்கிறாரே அண்ணாமலை...  ஆளுநரும் அதை வழிமொழிகிறாரே? 

அண்ணாமலையும் ஆளுநரும்தான்  சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயல்கிறார்கள்.  சட்டமன்ற சீர்குலைவு நடந்தால் அதற்கு அவர்கள்தான் காரணம். தமிழ்நாடு அமைதியான மாநிலம். எந்தக்கட்சி ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அமைதிக்கு பெயர் போனவர்கள்; வன்முறையை விரும்பாதவர்கள். படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும்,  சமூகத்தில் உயர வேண்டும் என்கிற நிலைப்பாடு கொண்டவர்கள்.  முழுக்க முழுக்க உழைப்பாளிகள். இப்போது அப்படி இங்கே அப்படி என்ன சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது? இவர்களால் தான் தமிழ்நாட்டுக்கு அச்சமும், பாதுகாப்பின்மையும் ஏற்படுகிறது. 

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

எந்தக் கட்சியாவது இவ்வளவு வெளிப்படையாக ரவுடிகளையும், கிரிமினல் குற்றவாளிகளையும், போலீஸால் தேடப்படுகிற குற்றவாளிகளையும், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்கிறவர்களையும், சாதாரண ஏழை எளிய மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுபவர்களையும் கட்சியில் சேர்க்குமா?  ரொம்பவே நேர்மையானவராக சொல்லிக்கொள்கிற அண்ணாமலை ஏன் இவர்களை சேர்க்கிறார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  

குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

இப்படி கட்சியில் சேர்க்கப்படுகிறவர்கள் தான் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,  ஊழல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அண்ணாமலை ஒரு ஊழல்வாதி மட்டுமல்ல வசூல் ராஜாவும் கூட. அவர் யாத்திரை நடத்துவதே அதற்காகத் தான். யாத்திரை  என்ற பெயரில் மிரட்டிப் பணம் வசூலிக்கிறார்கள். இதை நான் மட்டும் சொல்லவில்லை... அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரே கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தியுடன்...
ராகுல் காந்தியுடன்...

மீண்டும் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதை இடதுசாரிகள் விரும்பவில்லை என்கிறார்களே..?          

கேரளாவில் நாங்கள் இடதுசாரிகளை எதிர்த்துத்தான் போட்டியிடப் போகிறோம் என்பது எல்லோருக்குமே தெரியும். அங்கு அரசியல் சூழல் அதுதான்.  கடந்த தேர்தலில் இடதுசாரிகளை எதிர்த்து கேரளத்தில் போட்டியிட்ட அதே நேரத்தில்தான் மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம். அந்தந்த மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றபடிதான் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கிறது. 

எங்கள் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும்  இந்த மக்கள் விரோத,  இந்தியாவை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்கிற, பொருளாதாரத்தின் முதுகெலும்பை அடித்து நொறுக்கிய  நரேந்திர மோடி, பாஜக அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நோக்கம். அதைக் கூட்டணியில் இருக்கிற எல்லா தலைவர்களுமே நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். நோக்கம் ஒன்றாக இருந்தாலும் வழிமுறைகள் வெவ்வேறாகத்தான் இருக்கிறது; அப்படித்தான் இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி கொள்கை ரீதியான ஒரு கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும். 

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறதா? 

இங்கு அவர் போட்டியிட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால்,  அது அவருடைய விருப்பம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முடிவு.

பெண்கள் குறித்து  பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய பேச்சு கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மன்னிப்புக் கோரலும் சம்பிரதாயமாகவே இருக்கிறது. இதுகுறித்து இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் வாய் திறக்காதது ஏன்?

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

அவர் எந்த நோக்கத்தில் எந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை. பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவோ அல்லது மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலோ அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். எனினும் இது குறித்து காங்கிரஸ் கட்சி இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத நிலையில் நான் அதில் கருத்து கூறுவது பொருத்தமாக இருக்காது.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in