பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

செருப்பால் அடி வாங்கும் வேட்பாளர்
செருப்பால் அடி வாங்கும் வேட்பாளர்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் செருப்படி வாங்கியுள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள  230 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  டிசம்பர் 3ம் தேதி வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இங்கு  பாஜக-காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் போராடி வருகிறது. 

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் சாலையோர நபர் ஒருவரிடம் செருப்பால் அடி வாங்கியது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ரட்லாம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா. இவரை  சாலையோரம் அமர்ந்திருக்கும்  முதியவர் ஒருவர் செருப்பால் அடித்துள்ளார்.  அவரது தலை, முகத்தில் அந்த நபர் செருப்பால் அடித்துள்ளார். அதனை பராஸ் சக்லேச்சா தடுக்காமல் சிரித்தபடி அடிவாங்கிவிட்டு அவரது காலை தொட்டு வணங்கிவிட்டு  சென்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் செருப்பால் அடி வாங்கியது பொதுவெளியில் பரவி பெரும் பிரச்சினையாக  உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் இது குறித்த உண்மை தகவல்கள் வெளியாகி உள்ளன.  காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சாவை செருப்பால் தொடர்ந்து அடித்த நபரை அந்த பகுதி மக்கள் நடமாடும் பாபா என அழைக்கின்றனர். இஸ்லாமியரான இவரை அந்த பகுதி மக்கள் ஃபகிரா பாபாஜி என நம்புகின்றனர். இவர் சாதாரணமாக சாலையோரம் தான் சுற்றி வருகிறார். இவர் செருப்பால் அடிப்பதை ஆசிர்வாதம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இதனால் அவரை பார்ப்போர் செருப்பு கொடுத்து அடி வாங்கி கொள்கின்றனர். அந்த வகையில் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஃபகிரா, பாபாஜியிடம் காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதிய ஜோடி செருப்பு வாங்கி அடிவாங்கி உள்ளார் என்பது  தெரியவந்துள்ளது. இந்நிலையில்  அவரது இந்த செயலை பலரும் மூடநம்பிக்கை என விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in