HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

நயன்தாரா...
நயன்தாரா...

நடிகை நயன்தாரா கோலிவுட்டில் தனக்கான முன்னணி இடத்தைப் பிடித்திருப்பது ஒரே நாளில் மேஜிக் போல நடந்துவிடவில்லை. சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து மாடல், திரையில் நடிகை பயணம், அதில் கடந்து வந்த சர்ச்சை என இவை அனைத்தையும் தாண்டி இன்று ரசிகர்களுக்கு அவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’.

மகன் உயிர், உலக் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இன்று அவர் தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

நயன்தாரா...
நயன்தாரா...

கேரளாவில் பாரம்பரியமான கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. சினிமாவிற்காக அவர் வைத்துக் கொண்ட பெயர் தான் நயன்தாரா. அம்மா- அப்பா பார்த்து வைத்த பெயர் டயானா மரியம் குரியன். மலையாளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தவர் மாடலிங்கிலும் நுழைந்தார். அதில் இருந்து அவருக்கு ஒரு சில மலையாளப் பட வாய்ப்புகள் கிடைத்தது. அங்கிருந்து அவருக்கு ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள தமிழில் இரண்டாவது படமே ’சந்திரமுகி’யில் ரஜினிகாந்துடன் நடிக்க இருக்கிறார் என்ற ஜாக்பாட் அடித்தது. அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் ’சூப்பர் ஸ்டார்’ ஜோடி என்ற விஷயம் அவருடைய சினிமா கரியருக்கு முக்கியமானதாக அமைந்தது.

சிம்புவுடன் நயன்தாரா...
சிம்புவுடன் நயன்தாரா...

அதன் பிறகு ‘கஜினி’, ‘சிவகாசி’, ‘ஈ’ போன்றப் படங்களில் நடித்தாலும் சிம்புவுடன் அவர் நடித்த ‘வல்லவன்’ படம் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. சிம்புவுடன் காதலில் இருந்த நயன்தாராவுக்கு அந்தக் காலம் தனிப்பட்ட முறையில் பெரும் சர்ச்சைக்குள்ளானதாக மாறியது. சிம்புவுடன் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்கள் பொதுவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த பின்பு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்தார் நயன்தாரா.

அதன் பிறகு, சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகியவர் தனது உடல் எடையைக் குறைத்து, அழகு சிகிச்சை பெற்று ஆளே மாறி மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். குறிப்பாக, அஜித்துடன் இவர் நடித்த ‘பில்லா’ படம் கவர்ச்சியின் உச்சம் எனலாம். கருப்பு நிற பிகினியில் நயன்தாரா நடந்து வந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

பில்லாவில் நயன்தாரா...
பில்லாவில் நயன்தாரா...

அதன் பிறகு, ‘யாரடி நீ மோகினி’, ‘ஏகன்’, ‘சத்யம்’ என கமர்ஷியல் படங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவரின் வாழ்வில் மீண்டும் காதல் புயல் பிரபுதேவா வடிவத்தில் அடித்தது. ஏற்கனவே, மூன்று மகன்களுக்குத் தந்தையான பிரபுதேவா அப்போது தன் மனைவியுடன் பிரச்சினையில் இருந்தார்.

அந்த சமயத்தில்தான் நயன்தாரா- பிரபுதேவா காதல் மலர்ந்தது. பிரபுதேவா மனைவி ரம்லத் இவர்கள் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினைக் கொடுக்க பிரபுதேவாவை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க ஆரம்பித்தார் நயன். ஆனால், அவர் அதற்கு ஒத்துவராமல் போகவே அந்த உறவும் பிரிந்தது. இது நயன்தாராவை மனதளவில் கடுமையாக பாதித்தது. தமிழ், தெலுங்கு ஆகியவற்றில் பிஸியாக நடித்து வந்த நயன்தாரா தெலுங்கில் 2011ல் தான் சீதையாக நடித்த ’ஸ்ரீ ராம ராஜ்யம்’ தனது கடைசி படம் என அறிவித்தார்.

நயன்தாரா...
நயன்தாரா...

அவர் விலகினாலும் சினிமா அவரை விடுவதாக இல்லை. அட்லி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு சில கமர்ஷியல் படங்களிலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலும் நடித்து வந்தார். இரண்டு முறை ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகியவருக்கு மூன்றாவது முறையாக இயக்குநர் விக்னேஷ்சிவன் மூலம் அவர் ஏங்கிய அந்த அன்பு கிடைத்தது.

இந்த முறை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காதல் வளர்த்த அதே சமயம், தன் கரியரிலும் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார் நயன். கமர்ஷியல் படங்களின் கதாநாயகி என்ற வட்டத்தில் இருந்து வெளியே வந்து தொடர்ச்சியாக ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் கவனம் செலுத்தினார்.

விக்னேஷ் சிவன் மற்றும் தனது மகன்களுடன் நயன்தாரா...
விக்னேஷ் சிவன் மற்றும் தனது மகன்களுடன் நயன்தாரா...

’டோரா’, ‘அறம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஐரா’ என இவர் எடுத்து நடித்த அனைத்துப் படங்களுமே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. கோலிவுட்டில் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களுக்கென தனி மார்க்கெட் உருவாக்கியதில் நயன்தாராவுக்கும் முக்கிய பங்குண்டு. அதே சமயம், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் அவர் தவறவில்லை.

ஒவ்வொரு படத்தின் கதையைத் தேர்வு செய்வது, படத்திற்கு படம் தனது கதாபாத்திரத் தோற்றத்தை மாற்றிக் கொள்வது என மெனக்கெடும் நயன்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனைக் கரம் பிடித்தார். திருமணம் ஆன ஓராண்டுக்குள்ளேயே உயிர், உலக் என இரு மகன்களை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார் நயன். இந்த விஷயமும் சலசலப்பை ஏற்படுத்த அதை பொறுமையாகக் கடந்து வந்தார்.

நயன்தாரா...
நயன்தாரா...

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வருபவருக்கு பாலிவுட்டும் ‘ஜவான்’ மூலம் சிறப்பு கம்பளம் விரித்திருக்கிறது. நடிப்பதோடு மட்டும் நில்லாமல், படங்கள் தயாரிப்பு, லிப் பாம், ஸ்கின் பராமரிப்பு, நாப்கின், டீ பிசினஸ், உணவு என பல தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நயன்தாரா.

நடிகை டூ தொழிலதிபர் என வளர்ந்திருக்கும் நயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in