சுணங்கும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள்... பிரதமருக்கு முதல்வர் அவசர கடிதம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்தியாவிலேயே 4-வது பெரிய மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ. இதன் கீழ் 42 ரயில் நிலையங்கள் செயல்படுகிறது. சென்னைக்குள் சுமார் 54.65 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

இதன் இரண்டாம் கட்டமாக மேலும் 119 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித் தடங்களில் மெட்ரோ வழித் தடங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனினும், மத்திய - மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பை தருவதற்கான ஒப்புதல் தருவதில் தாமதம் ஏற்படுவதால் இந்தப் பணிகள் நிதியின்றி சுணங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட வரைபடம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட வரைபடம்

இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில் 50:50 என்ற சமபங்கு விகிதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதே அடிப்படையில் 63,246 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து 2019 ஜனவரியில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதிச் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

இதற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 2020 நவம்பர் 21-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக அடிக்கல் நாட்டியுள்ளார். 2021-2022ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்தது. பிரதமர் உடனான பல்வேறு சந்திப்புகளின் போது, இது தொடர்பாக நான் வலியுறுத்தினேன். ஆனாலும் இதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கிறது. மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்ய ஏதுவாக 2-ம் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் பங்களிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநில நிதியில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திட்டப் பணிகளின் வேகம் குறைவதோடு, மாநில அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டால் தான், சென்னை மக்களின் இந்த கனவு திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும். எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in