சிரஞ்சீவியால் மாறும் ஆந்திர அரசியல் வானிலை... கொதிப்பில் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள்

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த அரசியல் அதிரடியால், மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ளும் ஆந்திர மாநிலத்தில் அனல் கூடியுள்ளது.

ஆந்திராவில் நடைபெற உள்ள தேர்தல்களில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜக அடங்கிய கூட்டணிக்கு சிரஞ்சீவி வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இதன்பொருட்டு அவர் வெளியிட்ட வீடியோ பாஜக முகாமில் உற்சாகத்தையும், எதிர்முகாமான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கொதிப்பையும் தந்துள்ளது.

பவன் கல்யாண் கட்சிக்கு நன்கொடை அளிக்கும் சிரஞ்சீவி
பவன் கல்யாண் கட்சிக்கு நன்கொடை அளிக்கும் சிரஞ்சீவி

ஆகஸ்ட் 2008-ல் ’பிரஜா ராஜ்ஜியம் கட்சி’யை தொடங்கியதன் மூலம் தனது அரசியல் அத்தியாத்தை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. 2009 பொதுத்தேர்தல்களில் சிரஞ்சீவி கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சட்டப்பேரவைக்கு 17 உறுப்பினர்கள் தேர்வானபோதும், மக்களவைக்கு ஒருவர் கூட தேறவில்லை. இதனைத் தொடர்ந்து, தனிக்கட்சியாக அரசியல் பயணத்தை தொடர்வதில் தடுமாறிய சிரஞ்சீவி, பிப்ரவரி 2011-ல் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் கரைத்தார். பிரதிபலனாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராகி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுற்றுலாத்துறைக்கான மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

ஆனபோதும் அடுத்து வந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மாநிலத்திலும், மத்தியிலும் தோல்வியடைந்ததோடு, ஆந்திரபிரதேசம் மாநிலம் பிரிக்கப்பட்டதில், அரசியல் களநிலவரம் அடியோடு மாறியது. இதனால் சைலண்ட் மோடுக்கு மாறிய சிரஞ்சீவி, அப்போதைக்கு அரசியலுக்கு முழுக்குப் போட்டு சினிமாவில் மீண்டும் காலடி வைத்தார். அரசியலில் விட்ட வெற்றிகளை திரையுலகில் தந்து ரசிகர்களை தேற்றினார்.

பிரஜ்ஜா ராஜ்யம் கட்சியில் முக்கிய பங்கு வகித்த தம்பி பவன் கல்யாண், அண்ணன் சிரஞ்சீவி விட்ட அரசியல் இடத்தை பிடித்தே தீர்வது என்று கங்கணம் கட்டினார். 2014-ல் ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். ஆனால் தம்பியின் அரசியல் பிரவேசத்துக்கோ அவரது கட்சிக்கோ, சிரஞ்சீவி வெளிப்படையான ஆதரவை வழங்கவில்லை.

இந்த சூழலில் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி சேர்ந்திருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக அடங்கிய கூட்டணியின் 2 வேட்பாளர்களை ஆதரித்து வாய்ஸ் விட்டிருக்கிறார் சிரஞ்சீவி. தெற்கே காலூன்றத் துடிக்கும் பாஜக தமிழகத்தில் ரஜினி காந்துக்கு வலைவீசியது போன்றே நீண்ட காலமாக சிரஞ்சீவிக்கு தூண்டிலிட்டு வந்தது. தற்போது அதில் பகுதியளவு ஜெயித்தும் உள்ளது.

பெண்டுர்த்தி சட்டமன்றத் தொகுதியின் ஜனசேனா கட்சி வேட்பாளர் பஞ்சகர்லா ரமேஷ் பாபு மற்றும் அனகாபல்லி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் சி.எம்.ரமேஷ் ஆகிய இருவருக்குமாக மெகாஸ்டார் சிரஞ்சீவி வாக்களிக்குமாறு கோரிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு என சிரஞ்சீவி நேரடியாக களமிறங்கவில்லை. ஆனால் அவர் வெளியிட்ட பரிந்துரை வீடியோ அப்படியான அரசியல் கள சூழலை ஆந்திராவில் தம்போக்கில் உருவாக்கி உள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சிரஞ்சீவி -கோப்பு படம்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சிரஞ்சீவி -கோப்பு படம்

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலுவாக எதிர்வினையாற்றி இருப்பதே இதற்கு உதாரணம். “தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. சிங்கம் போல் தனித்துப் போரிட்டு வரும் எங்கள் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக இந்தக் குள்ளநரிகளும், ஓநாய்களும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வருகின்றன. இது எங்கள் சிங்கத்தை எந்த வகையிலும் பாதிக்காது” என்று ஒய்எஸ்ஆர்சிபி பொதுச் செயலாளர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி பேட்டியளித்தார். சிரஞ்சீவியை ஓநாய் என்பதா என சிரஞ்சீவி ரசிகர்கள் கொதித்தெழ, ஆந்திர அரசியலின் திடீர் மையமாக அவர் விருப்பமின்றியே உருவாகி இருக்கிறார் சிரஞ்சீவி.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in