‘பாஜகவில் மூச்சுத் திணறுது’ தாவிய வேகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய ம.பி மேயர் வெளிப்படை!

மேயர் விக்ரம்; காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மகன் நகுல்நாத் உடன்
மேயர் விக்ரம்; காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மகன் நகுல்நாத் உடன்

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு தாவிய சிந்த்வாரா மேயர் விக்ரம் அஹாகே, ‘அங்கே மூச்சுத்திணறலை உணர்ந்தேன்’ என்றபடி, சில தினங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியிருக்கிறார்.

மத்திய பிரதேச அரசியலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிந்த்வாரா மேயரான விக்ரம் அஹாகே என்பவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேகத்தில் தாய் கட்சிக்கு தற்போது திரும்பியிருக்கிறார். இது தொடர்பாக இன்று அவர் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“இன்று எனது கருத்துக்களை அச்சமோ அழுத்தமோ இன்றி பொதுமக்கள் முன்பாக வைக்க விரும்புகின்றேன்.சில நாட்களுக்கு முன் வேறொரு அரசியல் கட்சியில் இணைந்தேன். ஆனால் கட்சியில் இணைந்த நாள் முதல் மூச்சு திணறலை உணர்ந்தேன். சிந்த்வாராவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவரை எப்படி ஏமாற்ற முடியும் என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

வாழ்க்கையில் அரசியல் செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனால் அதில் இது ஒன்றல்ல. எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இன்று நான் கமல்நாத் அவர்களுடன் நிற்கிறேன். மேலும் சிந்த்வாரா மக்களுக்கு நான் வேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறேன். மக்களவைத் தேர்தலில் நகுல் நாத் அவர்களுக்கு வாக்களியுங்கள்" என்று அந்த வீடியோவில் உருக்கமாக அவர் பேசியுள்ளார்.

ஏப்ரல் 1 அன்று போபாலில் முதல்வர் மோகன் யாதவ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் வி.டி.ஷர்மா முன்னிலையில் விக்ரம் அஹாகே பாஜகவில் சேர்ந்தார். இருப்பினும், 20 நாட்களுக்குள் அவர் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார்.

பழங்குடி இனத்தை சேர்ந்த விக்ரம் அஹாகே, மத்திய பிரதேசத்தின் முதல் இளம் மேயர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மேயரானதோடு, மக்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றிருந்தவர் திடீரென பாஜகவுக்கு தாவியது மாநில அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாஜகவில் மேயர் விக்ரம்
பாஜகவில் மேயர் விக்ரம்

முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதோடு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் புகழ் பாடியிருக்கிறார் மேயர் விக்ரம். இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் தந்திருக்கிறது.

கூடு திரும்பியிருக்கும் மேயர் விக்ரமுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தனது மகன் நகுலுக்கு சீட் கிடைக்காத வெறுப்பில் பாஜகவுக்கு தாவ முயன்றதும் நடந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் மத்தியில் கட்சியை உலுக்கிய இந்த களேபரத்தால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, கமல்நாத்துடன் நாள் முழுக்க பேச்சுவார்த்தை நடத்தி அவரை கட்சியிலேயே தக்க வைத்திருக்கிறது. கமல்நாத் கைநழுவிய ஏமாற்றத்தில் இருந்த பாஜக, மேயர் விக்ரம் பாஜக வந்தது ஒருவகையில் திருப்தியடைந்தது. ஆனால் அவரோ வந்த வேகத்தில் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பி, பாஜகவுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in