கரூரில் அனுமதியின்றி 10க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலம் வந்ததாகவும், தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ். தங்கவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்டம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக கடந்த மார்ச் 31-ம் தேதி, வாங்கல் பகுதியில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
அவர்கள் அரங்கநாதன்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரியும், தாந்தோனிமலை வட்டார வளர்ச்சி அலுவலருமான வினோத் குமார் அங்கு வந்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்லக்கூடாது எனவும், விதிமுறைகளை பின்பற்றும்படியும் அவர் அதிமுகவினரிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் மறவாபாளையம் பகுதியிலும் அதேபோன்று அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பின்னால் சென்ற அதிகாரி வினோத்குமாரின் வாகனத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக ஒன்றிய செயலாளர் மதுசூதனன், ரமேஷ் குமார், கார்த்திக், ஜெகன் ஆகியோர் மறித்துள்ளனர். தொடர்ந்து வினோத்குமாரை ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த சிலர் அவரை தாக்க முயற்சித்த போது, போலீஸார் வினோத்குமாரை மீட்டு அனுப்பினர்.
இது தொடர்பாக வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், நேற்று மாலை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!
பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!
தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!