புதிய நீதி கட்சி தலைவருடன் அரவிந்த் மேனன் உள்ளிட்டவர்கள்
புதிய நீதி கட்சி தலைவருடன் அரவிந்த் மேனன் உள்ளிட்டவர்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா... அரவிந்த் மேனன் நேரடியாக களமிறங்கியதால் தமிழக பாஜக குஷி!

Published on

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் முறைப்படி தொடங்கியுள்ளார்.

அரவிந்த் மேனன்
அரவிந்த் மேனன்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்  அரசியல் கட்சிகள்  தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிர  கவனம் செலுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை இறுதிக்கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. ஆனாலும், இந்த இரண்டு கட்சிகளும் மறைமுகமான கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.

குறிப்பாக பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுகவும், பாஜகவும் போட்டி போட்டு மறைமுக பேரங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இக்கட்சிகளால் தங்கள் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது பாஜக வெளிப்படையான தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை தொடங்கியுள்ளது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

பாஜகவின் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்  அதிரடியாக தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகளை கையில் எடுத்துள்ளார். இரண்டு தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி, அதிலும் நாங்கள் சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம், அதற்கு சம்மதித்தால் தான் கூட்டணி என்று தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் கடந்த ஐந்தாண்டு காலமாகவே பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்,  பாஜகவின் தயவில் செயல்பட்டு வரும் ஜி.கே.வாசன் இவ்வாறு தெரிவித்திருந்தது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனால் முதல் ஆளாக அவரை சந்தித்தார் அரவிந்த் மேனன்.

ஜி.கே. வாசன் இல்லத்தில் அவரை சந்தித்த அரவிந்த் மேனன் பாஜக - தமாகா இடையே கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தமிழ் மாநில காங்கிரஸின் தயக்கத்தை உடைத்து எறிந்து அவரை கூட்டணிக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன்," பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தம்மை முதலில் சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடனும் கூட்டணி குறித்து அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் ஏற்கெனவே  வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிடப் போகிறேன் என்று தெளிவாக அறிவித்திருந்தார். அதனால் அவருடன் பேச்சில் அதிக நேரம் செலவிடப்பட வில்லை. எளிதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

மேலும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவரான பாரிவேந்தருடன் சந்திப்பு நடந்ததாகவும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தொகுதி உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் அதைத் தொடர்ந்து தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் ஆகியோரையும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அடுத்தடுத்து சந்தித்து பேச உள்ளார். கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை முதலில் உறுதி செய்து விட்டால் பிறகு பெரிய கட்சிகளுடன் நேரடியாக பேச்சு  நடத்தலாம் என்று பாஜக திட்டமிட்டு கூட்டணியை இறுதி செய்து வருகிறது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி,  சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் உள்ளிட்ட மேலும் பல கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in