டி.ஆர்.பாலுவுக்கு சிக்கல்... தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார்!

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

அமைச்சர் எல்.முருகன் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-யான டி.ஆர்.பாலு அவதூறாக பேசியதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில்  ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்பை அடுத்து மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மத்திய அரசு சார்பாக குழுவும், மத்திய அமைச்சர்களும் நேரடியாக வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எனினும் இரண்டு மாத காலம் ஆகியும் தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அவர் மத்திய அரசை விமர்சித்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

மேலும், தமிழ்நாட்டில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம் சாட்டிப் பேசினார் பாலு. அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, அவரை அமரும்படி கூறினார். இதனால் அவையில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நீங்கள் இந்த பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் என டி.ஆர்.பாலு, எல்.முருகனைப் பார்த்து ஆவேசமாக பேசியதால் பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து டிஆர் பாலு, தகாத வார்த்தையை சொல்லியிருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஆர்.பாலுவுக்கும் பாஜகவினருக்கும் இடையே அவையிலும்,  அவைக்கு வெளியேயும் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

டி.ஆர். பாலு
டி.ஆர். பாலு

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”ஒரு தலித் அமைச்சரை அமைச்சராக பார்ப்பதில் திமுகவுக்கு விருப்பமில்லை. டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் உபயோகிக்கக்கூடாத வார்த்தையை உபயோகித்து விட்டார் எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டி.ஆர்.பாலுவை கடுமையாக விமர்சித்தார். ஆனால், தான் எதுவும் அவதூறாகவோ, தவறாகவோ பேசவில்லை என டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.
ஆனாலும் இதை அத்தனை எளிதில் விட விரும்பாத பாஜக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி இருக்கிறது.  இது தொடர்பாக பாலு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in