மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 42 சதவீதமாக உயர்த்தியவர் பிரதமர் மோடி... அண்ணாமலை பெருமிதம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தற்போது 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார் பிரதமர் மோடி என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

படத்திறப்பு நிகழ்வில் அண்ணாமலை
படத்திறப்பு நிகழ்வில் அண்ணாமலை

மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனின் மருமகனும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்தவருமான த.சி.க.கண்ணனின் உருவப்படத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, த.சி.க.கண்ணனின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

படத்திறப்பு நிகழ்வில் அண்ணாமலை
படத்திறப்பு நிகழ்வில் அண்ணாமலை

அப்போது, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு மோடி பிரதமராகப் பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்தது. தற்போது பிரதமர் அதை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார். மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 30.5 ஆக இருந்தது.

எனவே, அப்போது அதை அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சராக இருந்த மோடி கூறினார். 1960-ல் பல நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தீர்மானித்தபோது மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தைத் தீர்மானித்தனர். எஞ்சிய 40 சதவீத நிதியைப் பிற வகையில் கணக்கிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதிப் பகிர்வாக வழங்கப்பட்டது.

படத்திறப்பு நிகழ்வில் அண்ணாமலை
படத்திறப்பு நிகழ்வில் அண்ணாமலை

ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை , அந்த மாநிலத்திற்கான நிதிப் பகிர்வில் 15 சதவீதம் அளவிற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. மேலும் மாநிலத்தின் மக்களிடையே உள்ள வருவாய் வித்தியாசம் 40 சதவீதம் அளவு கணக்கிடப்படுகிறது, புவியியல் அமைப்பின் அடிப்படையில் 15 சதவீதமும் , மாநிலத்தின் நிதி வசூல் போன்றவையும் கணக்கிடப்பட்டு நிதிப் பகிர்வு வழங்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வசூலில் 50 ரூபாய் மாநிலத்திற்கு நேரடியாகவும், 21 ரூபாய் மறைமுகமாக மானியங்களாகவும் என ஜிஎஸ்டி வசூலில் மொத்தம் 71 ரூபாய் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் 29 ரூபாயை மட்டுமே மத்திய அரசு எடுத்துக் கொண்டு தனது கட்டமைப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது.

அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின்
அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியா டுடே பத்திரிகையின் சர்வேயில் இந்தியாவில் புகழ் குறைந்து வரும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதே பத்திரிகை ஸ்டாலினை இந்தியாவில் மிகவும் பிரபலமான முதல்வர் என்று கூறியபோது திமுகவினர் அதைப் பெருமையாகப் பேசினர்.

ஆனால், இப்போது வந்துள்ள சர்வே முடிவு பற்றி அவர்கள் எதுவுமே பேசுவதில்லை. இதுபோன்ற காரணத்தால்தான் திமுகவினர் வடக்கு - தெற்கு பிரச்சினையை மீண்டும் எடுத்து வருகிறார்கள். வடக்கு, தெற்கு பிரச்சினை என்பது பிய்ந்து போன செருப்பு போன்றது, அதை மீண்டும் கொண்டு வந்தால் அதன் விளைவை திமுகவினர்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

அண்ணாமலை யாத்திரை
அண்ணாமலை யாத்திரை

எல்.முருகன் குறித்து டி.ஆர்.பாலு பேசியதை நாங்கள் சாதி ரீதியாகக் கொண்டு செல்லவில்லை, ஆனால், மூத்த அமைச்சரான எல்.முருகன் குறித்து டி.ஆர். பாலு பேசிய பேச்சில் அவர் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவரது உடல் மொழி , பேசிய பேச்சை மக்களும் பார்த்துள்ளனர். எனவே அதை வேறு எந்த கோணத்தில் எடுத்துக் கொள்ள முடியும்? இதில் சமூக நீதி இல்லையே. ஏற்கெனவே ஒருமுறை, 'நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா?' என்ற வார்த்தையை டி.ஆர்.பாலு பயன்படுத்தினார்.

ஓபிஎஸ், அண்ணாமலை (கோப்பு)
ஓபிஎஸ், அண்ணாமலை (கோப்பு)

நான்கரை ஆண்டு காலம் பாஜக தயவில்தான் அதிமுக ஆட்சி இருந்தது என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து நான் கருத்து கூற முடியாது. இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் குளிர்காய மாட்டோம். 2017- 2021 காலக்கட்டத்திற்கு அதிமுக எப்படி இருந்தது என்பது பாஜகவிற்கு தெரியாது. அந்த கட்சிக்குள்ளே இருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு அது தெரிந்திருக்கலாம். ஆனால், பிரதமர் மீது தொடர்ந்து மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ், அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என் மண், என் மக்கள் யாத்திரை
என் மண், என் மக்கள் யாத்திரை

சென்னைக்குள் நடைபயணத்திற்கு அனுமதி வழங்காததால் காவல் துறை மீது எந்த கோபமும் இல்லை. சென்னைக்குள் போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள சாலைகளில் இல்லாமல் மற்ற சாலைகளில் யாத்திரைக்கு அனுமதி தந்தால் போதும் என்றுதான் கேட்டோம்.

எங்கள் யாத்திரையில் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. மிகக் கவனமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறோம். யாத்திரையில் தனியாகக் குழு அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறோம். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in