குண்டர் சட்டத்தில் அமர் பிரசாத்? உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு!

 அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறி, அவரை ஜாமீனில் விடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அமரின் மனைவி நிரோஷா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அருகே பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்றியதை எதிர்த்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அக்கட்சியின் மாநில இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கொடிக்கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அமர் பிரசாத்தை, போலீஸார் கைது செய்தனர்.

அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட போது
அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட போது

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி, அதில் பிரதமர் மோடி படத்தை ஒட்டியதாக சென்னை கோட்டூர்புரம் போலீஸார் பதிவு செய்த வழக்கில் அமர் கைது செய்யப்பட்டார். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும் அமர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகளில், ஒரே ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளதால் அமரை, குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அமர் பிரசாத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்?
அமர் பிரசாத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்?

இந்நிலையில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட தன் கணவர் அமர் பிரசாத்தை, குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளும் கட்சியின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், தனது கணவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில், உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் கூறி, குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிரோஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in